மூளைப்பலம் உங்கள் மூல பலம்| விருச்சிகம் பொதுப்பலன்கள்
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம் மற்று கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும்,
மற்றும் ஜென்ம ராசி எதுவென்று தெரியாத கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்களுக்கும், தோ, ந, நி, நு, நே, நோ, ய, யி, யு… ஆகிய எழுத்துகளைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்.
ராசியின் அதிபதி: செவ்வாய்.
நட்சத்திர அதிபதிகள்: குரு, சனி, புதன். யோகாதிபதி: குரு, செவ்வாய். பாதகாதிபதி: சந்திரன்.
மாரகாதிபதி: சனி, புதன்.
**** அதிகாரத் தோரணையும், இரக்க சிந்தனையும், எந்த ஒன்றிலும் முன்னால் நிற்கக்கூடிய தைரியமுடையவரான விருச்சிக ராசி நண்பர்களே!
எந்த ஒரு காரியத்தையிலும் தன்னம்பிக்கையோடு செயல்பட்டு அதில் நீங்கள் வெற்றியும் காண்பீர்கள். மூளை பலம்தான் உங்களுடைய மூல பலமாக இருக்கும். பணத்தாலும் பொருளாலும் உங்களை யாராலும் மாற்றிவிட முடியாது. ஆனால் பாசத்தால் நேசத்தால் உங்களை மாற்றி விட முடியும்.
பதவிக்கும் பணத்திற்கும் மயங்காமல் உதவிக்கும் உண்மைக்கும் எப்போதும் உண்மையானவராக நீங்கள் இருப்பீர்கள். தெய்வ சிந்தனை என்பது உங்களுக்குள் இருக்கும் என்றாலும் வெளித்தோற்றத்திற்கு கரடுமுரடானவர்போல் தோற்றம் அளிப்பீர்கள்.
அதிகபட்ச சாதுரியம் நிறைந்தவராக நீங்கள் இருப்பீர்கள். உலகில் புகழ் பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உங்களின் கடந்த கால வாழ்க்கையில் நடந்தவற்றை சிந்தித்துக்கொண்டே எதிர்காலத்திற்குறிய வழியை திட்டமிடுகின்ற ஆற்றல் பெற்றவர் நீங்கள் உங்களுக்குள் ஒரு தீர்க்கதரிசனம், ஞானம் இருக்கும். எனவே, உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தியும் உங்களுடன் இருப்பவரைப் பாதுகாக்கும் சக்தியும் உங்களுக்கு இயற்கையாகவே இருக்கும். நாளை என்ன நடக்கும் என்பதை தீர்மானிக்கும் சக்தி உங்களுக்கு உண்டு என்பதால் நாளைய வாழ்க்கைக்காக இன்றே வழியமைத்துக் கொள்வீர்கள்.
உங்களில் பலருக்கு இளவயதில் சோதனைகளே வாழ்க்கையாக இருக்கும் பலருக்கு தாயன்பு என்பதுகூட கேள்விக்குறியாகத்தான் இருக்கும். என்றாலும், உங்கள் சகிப்புத் தன்மையால் உங்கள் முன்னேற்றத்தை நோக்கி உறுதியாகவே செயல்படுவீர்கள். மன உறுதி மிக்கவர்கள் நீங்கள் என்பதால் ஒரு விஷயத்தில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் அதை நீங்களாகவே மாற்றிக்கொள்ள நினைத்தாலும் மாற்றிக்கொள்ள முடியாமல் போய்விடும்.
பொதுவாக எல்லோரிடமும் நீங்கள் சகஜமாகப் பழகி விடமாட்டீர்கள் பழகியவர்களிடம் கூட உங்கள் அந்தரங்க விஷயங்கள் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டீர்கள். உங்கள் குறிக்கோளையும் உங்களுக்குரியதையும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். உங்கள் சாமர்த்தியத்தையும், அறிவையும், அனுபவத்தையும் சமயத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதில் நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். உங்களைப்பற்றி புறம் கூறுபவர்களையும், உங்களுக்குக் கேடு விளைவிப்பவர்களையும் வஞ்சம் தீர்க்காமல் விடமாட்டீர்கள். சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து எதிரியை அழிக்கும் திறன் பெற்ற உங்களுக்கு பழிவாங்கும் உணர்ச்சி பிறவிக்குணம் என்றே சொல்ல வேண்டும். உங்களுக்கு கோபம் வருவது தெரியாது, வந்து விட்டால் உங்களுக்கே உங்கள் தலைகால் தெரியாது.
எப்படிப்பட்டவரையும் உங்கள் வார்த்தையால் அச்சமடைய வைத்து விடுவீர்கள். பொதுநல சேவையில், அரசியலில் ஈடுபாடு கொள்வதுடன் தான, தர்மம் செய்வதிலும் சிறந்து விளங்குவீர்கள். எப்போதும் தனது கட்சி, தனது மதம் என்று பேசுவதற்கு உங்களிடம் நிறையவே விஷயங்கள் இருக்கும். எத்தகையை தோல்வி, இழப்பு, பிரச்சினைகளையும் கண்டு பயப்பட மாட்டீர்கள். அதேபோல் எத்தனைப் பெரிய நபராக இருந்தாலும் முன்பின் அறிமுகமில்லாதவராக இருந்தாலும் கூச்சம் இல்லாமல் எளிதாக அவர்களிடம் பேசி நட்பு கொள்ளக்கூடியவராக நீங்கள் இருப்பீர்கள். பெற்றோரின் ஆதரவில், பொறுப்பிலிருந்து இளைய வயதிலிருந்தே விலகி உங்களை நீங்களே வளர்த்துக் கொண்டு முன்னேற்றம் காண்பவராக நீங்கள் இருப்பீர்கள்.
பூர்வீக சொத்து என்று இருந்தாலும் அதை அனுபவிக்கும் யோகம் உங்களுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். அப்படி இருந்தாலும் ஒரு காலகட்டத்துக்குப் பின் அது உங்களைவிட்டுப் போய்விடும். வசீகரம், கவர்ச்சி, மனோதிடம், நெஞ்சுரம் உங்களின் பிறவி சொத்தாகும். எப்பாடு பட்டாகிலும் உயர்ந்த நிலையை எட்டி விட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் செயல்படும் உங்களுக்கு நீங்கள் நினைத்தபடியே யாவும் நடந்தேறும்.
சுதந்திரமாக இருப்பதையும், செயல்படுவதையும் விரும்புகிற நீங்கள் எல்லோரும் உங்களுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்றும் விரும்புவீர்கள்.
இவையெல்லாம் விருச்சிக ராசியில் பிறந்த உங்களுடைய பொதுப்பலன்களில் சிலவாகும்.
எந்த ராசியில் பிறந்தாலும், லக்கினம், கிரக அமைப்புகள், தசாபுத்தி, போன்றவற்றுக்கு ஏற்பவும், கிரகங்களின் சஞ்சாரத்திற்கு ஏற்பவும், அந்த கிரகங்கள் உங்களுடைய ஜாதகத்தில் அமர்ந்திருந்த நிலைக்கேற்பவும் உங்களுக்குப் பலன்கள் மாறுபடும்.