இருக்கும் இடத்தில் நீங்கள் தனித்துவம்|சிம்மம் பொதுப்பலன்கள்

மகம், பூரம், மற்றும் உத்திரம் 1ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கும், மற்றும் ஜென்ம ராசி எதுவென்று தெரியாத ஆவணி மாதத்தில் பிறந்தவர்களுக்கும், ம, மி, மு, மே, மோ, ட, டி, டு, டே… ஆகிய எழுத்துகளைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்.

ராசியின் அதிபதி: சூரியன். நட்சத்திர அதிபதிகள்: கேது, சுக்கிரன், சூரியன். யோகாதிபதி: சூரியன், செவ்வாய், குரு. மாரகாதிபதி: சுக்கிரன், குரு.


ராஜ கிரகமான சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்து, மற்றவர்களின் பார்வைக்கு உச்ச நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிம்ம ராசி நண்பர்களே!

எந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் தனித்துவத்துடன் விளங்கிடக் கூடியவர்களாக நீங்கள் இருப்பீர்கள். உங்களை விமர்சிப்பவர்கள்கூட உங்களுக்கு முன்நின்று பேச யோசிப்பார்கள், அந்த அளவிற்கு ஒரு அச்சம் கலந்த பயம் உங்கள்மீது மற்றவர்களுக்கு இருக்கும். காட்டில் சிங்கத்தைக் கண்டு மற்ற மிருகங்கள் அஞ்சுவதுபோல் நாட்டில் உங்களைக்கண்டு மற்றவர்கள் பயப்படுவார்கள், துணிச்சலுடன் செயல்படக்கூடியவரான உங்களுடைய பேச்சிலும் அதிகாரத்தொணி இருக்கும். அரசியல், வாழ்க்கை, ஆன்மிகம் எதுவாக இருப்பினும் அந்த இடத்தில் நீங்களே முதன்மையாளராக இருப்பீர்கள். எந்த நிலையிலும் அச்சம் கொள்ளாதவராகவும் எது வந்தாலும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் விளங்குவீர்கள். மனதில் அச்சம் உண்டானாலும் அதை வெளிக்காட்டாமல் எப்போதும் கம்பீரமாக காட்சி அளிப்பதுடன், எந்த இடத்திலும் முதலிடத்தை வகிக்கும் யோகம் கொண்டவர் நீங்களாகவே இருப்பீர்கள்.

பொருளைக் காட்டிலும் புகழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் எந்த ஒன்றுக்காகவும் பின்வாங்கவும் மாட்டீர்கள், அஞ்சவும் மாட்டீர்கள், பின் விளைவுகளையும் கண்டு பயப்பட மாட்டீர்கள். அத்தகைய சக்தி கொண்டவர்கள் நீங்கள்.

உங்கள் ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலோர் அதிகாரம் செலுத்துகின்ற பணியிலும், நிர்வாகம் செய்கின்ற இடத்திலும், அரசியலிலும், அரசு வேலைகளிலும், அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிலும் பணியில் இருப்பீர்கள். அதற்கு காரணம் உங்கள் ராசியாதிபதியான சூரியன்தான்.

நீங்கள் முயற்சியே செய்யா விட்டாலும் மதிப்பிற்குரிய தொழில் அமைப்பு உங்களுக்கு இயற்கையாகவே அமைந்து விடும். அதேபோல், நீங்கள் எந்தத் துறையில் நுழைந்தாலும் அங்கே உயர்ந்த இடத்தை நீங்கள் அடைந்து விடுவீர்கள். உங்களில் பெரும்பாலோருக்கு அரசியல் ஈடுபாடும், சமூக சேவையில் நாட்டமும் இருக்கும். உங்கள் ராசியாதிபதி பகை பெறாமலிருந்தால், பகைபெற்ற கிரகங்களின் பார்வை பெறாமல் இருந்தால் அதிகாரத்திலும் நீங்கள்தான் முதல் இடம் வகிப்பீர்கள். எம்.எல்.ஏ., எம்.பி. அமைச்சர் என்று உங்கள் வளர்ச்சி உயர்ந்து கொண்டே இருக்கும். அதிகாரம் செய்யக் கூடியவர்களாகவே எப்பொழுதும் நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் செய்யும் தொழிலில் கூட நீங்கள்தான் முதல் இடம் வகிப்பீர்கள். அத்தகைய சுதந்திரமான தொழிலையே நீங்கள் தேர்வு செய்வீர்கள். அதில் படிப்படியாக உயர்வினைக் காண்பீர்கள்.

உங்கள் வாழ்க்கை உங்கள் குடும்பத்தைச் சார்ந்ததாக இருப்பதைவிட பொது நலத்தைச் சார்ந்ததாகவே இருக்கும். ஊருக்காக உழைப்பதிலும் பொதுமக்களுக்காக சிந்திப்பதிலும் நீங்களே முதன்மையானவராக இருப்பீர்கள். யாரிடமும் எதையும் எதிர்ப்பார்த்து பேசாதவர் நீங்கள் என்பதால் எல்லாவற்றையும் வெளிப்படையாகவே பேசி அருகில் இருப்பவர்களின் வெறுப்புக்கு ஆளாவீர்கள். இதனால் நாளுக்கு நாள் உங்களுக்கு எதிரிகள் அதிகரிப்பார்கள். உங்கள் குடும்பத்தினரே உங்கள் பேச்சைக் கேட்டு உங்கள் மீது கோபம் கொள்வதுடன் உங்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தும் விடுவார்கள். ஆனால், உங்கள் ராசிநாதனான சூரியன் ஆட்சி, உச்சம், நட்பு நிலை அடைந்து நீங்கள் செல்வாக்குடன் திகழ்ந்தீர்களேயானால் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிரிகள் கூட உங்களைக் கண்டு அஞ்சுவார்கள். உங்களை எதிர்ப்பவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார்கள்.

உங்கள் ராசிக்கு பஞ்சமாதிபதியும் அட்டமாதிபதியுமான குரு பகவான் உங்கள் ராசிநாதனான சூரியனுடன் இணைந்தோ, பார்த்தோ, சாரமோ பெற்றிருந்தால் உங்களுக்கு நிர்வாகத் திறமை மிகுந்திருக்கும். எந்தத் துறையிலும் முதன்மை இடத்திற்கு வந்துவிடுவீர்கள். அரசியல் ஈடுபாடும் பிரபலமாகும் யோகமும் தானே உண்டாகும். செல்வமும் செல்வாக்கும் சொல்வாக்கும் இயற்கையாகவே உங்களிடத்தில் அமைந்திருக்கும். உங்கள் ஊரிலும் நீங்கள் செல்வாக்குமிக்கவராகவும் மற்றவர்கள் மதித்திடக்கூடியவராகவும் பிரமுகராக விளங்குவீர்கள்.

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உங்கள் கொள்கையை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சுதந்திரமாக இருப்பதே உங்களுக்குப் பிடிக்கும். எதையும் தீர்க்கமாக சிந்தித்து முடிவெடுக்கும் உங்களுக்கு உற்றார் உறவினர்களின் ஆதரவும் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு கிடைக்காமல் போகும். அடுத்தவர் நலனுக்காக எடுத்த காரியங்களை உடனுக்குடன் முடித்துக் கொடுப்பீர்கள். பதவிகள் உங்களைத்தேடி வரும். உங்கள் பகுதியிலாவது நீங்கள் எல்லோருக்கும் தெரிந்தவராக இருப்பீர்கள்.

திருமண வாழ்க்கை மட்டும் உங்களில் பலருக்கு திருப்திகரமாக அமையாது, அதற்கு உங்களின் அதிகார மனப்பான்மை, அடக்கியாள நினைக்கும் எண்ணமும் ஒரு காரணமாக இருக்கும். உங்களுக்கு வரும் வாழ்க்கைத் துணையும் நூறு சதவிகிதம் அந்நியத்தில் மட்டுமே அமையும். திருமணத்திற்குப் பின் தனித்து வாழவே நீங்கள் விரும்புவீர்கள். கூட்டுக்குடும்பம் என்பதெல்லாம் உங்களுக்கு ஒத்து வராத ஒன்றாகும், பெண் வாரிசுகளை விட ஆண் வாரிசுகளே உங்களுக்கு அதிக அளவில் இருக்கும்.

இவையெல்லாம் சிம்ம ராசியில் பிறந்த உங்களுடைய பொதுப்பலன்களில் சிலவாகும்.

எந்த ராசியில் பிறந்தாலும், லக்கினம், கிரக அமைப்புகள், தசாபுத்தி போன்றவற்றுக்கு ஏற்பவும், கிரகங்களின் சஞ்சாரத்திற்கு ஏற்பவும், அந்த கிரகங்கள் உங்களுடைய ஜாதகத்தில் அமர்ந்திருந்த நிலைக்கேற்பவும் உங்களுக்குப் பலன்கள் மாறுபடும்.

எழுதுவது : சோதிடவித்தகர் பரணிதரன்