நினைத்ததை நிதானமாக செய்து முடிக்கும் வல்லமை | மகர ராசிக்காரரின் பொதுப்பலன்கள்

உத்திராடம் 2, 3, 4 ஆம் பாதங்கள். திருவோணம், அவிட்டம் 1, 2 ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கும்,

மற்றும் ஜென்ம ராசி எதுவென்று தெரியாத தை மாதத்தில் பிறந்தவர்களுக்கும்,

போ, ஜ, ஜி, கி, கு, கே, கோ, க, கீ… ஆகிய எழுத்துகளைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்.

ராசி அதிபதி: சனி.

நட்சத்திர அதிபதிகள்: சூரியன், சந்திரன், செவ்வாய்

யோகாதிபதி: சனி, சுக்கிரன், புதன். பாதகாதிபதி: செவ்வாய்.

மாரகாதிபதி: சனி, சந்திரன்.


எந்த ஒன்றாக இருந்தாலும் அதில் யோசித்து செயல்படக்கூடியவரான, வேகத்தைக் காட்டிலும் விவேகம் நிறைந்தவரான மகர ராசி நண்பர்களே!

ஒரு செயலை எப்படித் தொடங்க வேண்டும். ஒரு வார்த்தையை எப்படி வெளிப்படுத்த வேண்டும். எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்பதையெல்லாம் மிகச் சரியாக எடை போடக்கூடிய திறமையும், பேச்சாற்றலும், அதன் வழியே வாழ்க்கையை நடத்திடக் கூடிய நிலையையும் கொண்டவர் நீங்கள். ஆன்மீக சிந்தனை கொண்டவரான நீங்கள் நினைத்ததை சாதிப்பதற்காக எப்போதும் நிதானத்தையே கடைபிடிப்பீர்கள். பார்வைக்கு நீங்கள் மென்மையானவராய், பழகுவதற்கு இனிமையானவராய் கள்ளம் கபடமற்றவராகவே காட்சி அளித்தாலும் உங்கள் குறிக்கோளில் எப்போதும் நீங்கள் தெளிவாகவே இருப்பீர்கள். எப்பாடு பட்டாகிலும் நாணல்போல் வளைந்து கொடுத்து சாதிக்க வேண்டியதை சாதித்துக் கொள்வீர்கள். சனி பகவான் உங்கள் ராசிநாதன் என்பதுடன் அவரே உங்களுக்கு வாக்காதிபதியும் குடும்பாதிபதியுமாவார் என்பதால் நீங்கள் மிகவும் அழுத்தமானவர் என்றே கூறவேண்டும். எதற்காக எதைச் செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். நீங்கள் ஈடுபட்ட காரியத்தில் தோல்வி என்றாலும் அதற்காக தளர்ந்து விடமாட்டீர்கள்.

உங்கள் ராசிநாதன் சனி பகவானுக்கு உங்கள் களத்திர ஸ்தானாதிபதியான சந்திரன் பகைவர் என்பதால் உங்கள் திருமண வாழ்க்கையில் மிகவும் நிதானத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். அதே நேரத்தில், களத்திரக் காரகனான சுக்கிர பகவான் உங்கள் ராசிநாதனுக்கு நட்பானவர் என்பதால் நீங்கள் நினைத்தவாறே உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். வாழ்வின் முற்பகுதி உழைப்பு உழைப்பு என்று சென்றாலும் பிற்பகுதி உங்களுக்கு யோகமாகவே இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு யோகம் உதவி என்பது சிரமம் தான். கடைசி காலத்தில்கூட உங்களுக்குப் பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள் என்று கூற முடியாது. அதற்கு காரணம், பிள்ளைகள் நலனில் நீங்கள் அக்கறை எடுத்துக் கொள்ளாதவர்கள் என்பதுதான்.

இல்லற வாழ்வில் தாமதமாக மணம் செய்துகொள்ளும் சூழ்நிலை உங்களுக்கு உருவாகலாம். தாமத விவாகம்தான் உங்கள் வாழ்வில் நற்பலன்களை வழங்கும். இளம் வயது திருமணத்தால் பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். இருப்பினும், கனப்பொருத்தம், மகேந்திர பொருத்தம், ரஜ்ஜூ பொருத்தம் ஆகியவை பொருந்துமானால் வாழ்க்கைத் துணையால் வளர்ச்சிக்கூடும். உங்கள் ராசியில் குரு பகவான் நீச்சம் அடைகிறார். செவ்வாய் பகவான் உச்சம் அடைகிறார் என்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் உங்களுக்கு இருந்தாலும் ஆன்மிக வழிகாட்டிகளாலும் ஈடுபாட்டினாலும்தான் உங்கள் வாழ்வில் மாற்றங்கள் நிகழும்.

ஒரே சமயத்தில் இருவேறு நன்மைகளை நீங்கள் அடைய முயல்வீர்கள். ஒரு வகையில் செலவு செய்தால் பல வகையில் வருமானம் அல்லது ஆதாயம் வரவேண்டும் என்று கருதியே செலவு செய்வீர்கள். எந்த நேரத்தில் எந்தக் காரியத்தை எத்தகைய வகையில் எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசித்தும் ஆழ்ந்த யோசனையுடனும் செயல் படுவீர்கள். உங்களுடைய போக்கும் நடவடிக்கையும் கூட விசித்திரமாகவே இருக்கும். சில சமயங்களில் உங்கள் புத்தி பேதலிக்கும். அதனால் பிரச்சினைகளுக்கு ஆளாவீர்கள். நிறைய சவால்களை சந்திக்க வேண்டியவர்களாகவும் நீங்களே இருப்பீர்கள். உயர்வை அடைய வேண்டிய நேரத்தில் உங்கள் மனநிலையில் மாற்றமும் சோர்வும் உண்டாகி உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைப் போடும். உங்களில் சிலர் உங்களுக்கு நன்மையானவற்றை இழந்துவிட்டு ஐயோ இழந்துவிட்டோமே, தவறு செய்து விட்டோமே என்று வருந்துவீர்கள்.

உங்கள் ராசிநாதன் சனி பகவான் என்பதால், நீங்கள் எவ்வளவு தைரியம் உடையவர்களாக இருந்தாலும் உங்களில் பலருக்கு பயமும், கட்டுப்பாடுகளும் இயற்கையாகவே ஏற்படும். உங்கள் வாழ்வில் உண்டாகும் சந்தர்ப்பச் சூழல்கள் நிகழ்ச்சிகள் முதலியவற்றில் சில உங்களைப் பயமுறுத்தும். உங்கள் அறிவிற்கு புலனாகாத ஏதோ ஒன்றிற்கு நீங்கள் பயப்படுவீர்கள். நண்டு பிடிக்குள் சிக்கிக் கொண்டதைப் போல அவதிப்படுவீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் எந்த ஒரு முடிவையும் நீங்கள் அவசரப்பட்டு எடுக்கக்கூடாது் உங்கள் ராசிநாதன் நியாய தர்மத்தின்படி நடந்து கொள்பவர், தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யமின்றி தண்டிப்பவர் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. நீங்கள் தவறு செய்ய ஆரம்பித்தால் அதனால் ஆபத்தான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியதாக இருக்கும். உங்களுக்கு இயல்பாகவே இருக்கும் கர்வமும், உங்கள் மனப்போக்கின்படி நடந்து கொள்ளும் குணமும் உங்களுக்கு சங்கடத்தையும் பாதிப்புகளையும் உண்டாக்கும். அதில் சிக்கிக்கொண்டு அவதிப்பட வேண்டியதாகி விடும்.

தோல்வி என்பது உங்களுக்கு உண்டாகும் என்றால் அது, உங்கள் அகந்தையின் காரத்தினாலாகவே இருக்கும். உங்கள் சுயநலனுக்காக மற்றவர்களுடைய பலவீனங களைப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கு உங்களில் பலருக்கு இருக்கும். பல நேரங்களில் உங்கள் உள்ளுணர்வே உங்களுக்குப் பகையாகிவிடும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நன்மைகளைக் காண வேண்டுமென்றால் நல்லவராகவும், ஒழுக்கமானவராகவும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

இவையெல்லாம் மகர ராசியில் பிறந்த உங்களுடைய பொதுப்பலன்களில் சிலவாகும்.

எந்த ராசியில் பிறந்தாலும், லக்கினம், கிரக அமைப்புகள், தசாபுத்தி போன்றவற்றுக்கு ஏற்பவும், கிரகங்களின் சஞ்சாரத்திற்கு ஏற்பவும், அந்த கிரகங்கள் உங்களுடைய ஜாதகத்தில் அமர்ந்திருந்த நிலைக்கேற்பவும் உங்களுக்குப் பலன்கள் மாறுபடும்.


எழுதுவது – சோதிடவித்தகர் பரணிதரன்