நாட்டோவைத் தவிர்ந்த முக்கிய தோழன் என்ற இடத்தைக் கத்தாருக்கு வழங்கியது அமெரிக்கா.
வெள்ளை மாளிகையில் ஜோ பைடனால் வரவேற்கப்பட்டிருக்கும் முதலாவது வளைகுடா நாட்டுத் தலைவர் என்ற கௌரவம் கத்தாரின் அரசன் தமீம் பின் ஹமாத் அல் -தானிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், நாட்டோ அமைப்பைத் தவிர்ந்த முக்கிய தோழமை நாடுகள் என்று அமெரிக்கா கைகோர்த்துக்கொள்ளும் 17 நாடுகளிலொன்றாக கத்தார் ஆகியிருக்கிறது.
ஜோ பைடன் கத்தார் அரசனுக்கு மேற்கண்ட வரவேற்பைக் கொடுக்கக் காரணம் அவர்கள் மூலமாக ஐரோப்பாவுக்குத் தேவையான எரிபொருளைக் கொடுக்கும் ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளவா அல்லது கத்தார் மூலம் மத்தியகிழக்கு அரசியல், ஆப்கானிஸ்தானிலிருந்து இராணுவத்தைத் திருப்பியெடுத்தலில் கிடைத்த உதவிகளுக்காகவா என்று யோசிக்கலாம். சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை இரண்டாவதையே காரணம் என்கிறது.
சமீப வாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயொனும், ஜோ பைடனும் ஐரோப்பாவுக்குத் தேவையான எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகள் பற்றிச் சம்பாஷித்து ஒன்றிணைந்து செயற்பட ஒன்றுபட்டிருக்கிறார்கள். நாட்டோவின் பொதுச் செயலாளர் ஸ்டோல்ட்தன்பர்கும் ஐரோப்பாவின் எரிபொருள் தேவைக்கு ரஷ்யாவிடம் தங்கியிருக்கலாகாது என்றும் வேறிடங்களில் தேடிக்கொள்ளவேண்டுமென்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜெர்மனிக்கான இயற்கை வாயு எரிபொருளில் 55 % ரஷ்யாவிடம் கொள்வனவு செய்யப்படுகிறது. ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் எரிபொருளை அதிகப்படுத்தும் நோக்குடன் சமீப வருடங்களில் நோர்ட்ஸ்டிரீம் 2 என்ற குளாய் வழியை ரஷ்யா கடலுக்குக் கீழே போட்டிருக்கிறது. அதைப் பாவிக்கும் அனுமதியை இன்னும் ஜெர்மனி கொடுக்கவில்லை. அந்த வழிக்கு அனுமதி கொடுப்பது பற்றி டொனால்ட் டிரம்ப் காலம் உட்பட அமெரிக்காவுக்கும், ஜெர்மனிக்கும் மனக்கசப்பு இருந்து வருகிறது. உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமிக்குமானால் அதைப் பாவிக்கும் அனுமதியை ஜெர்மனியோ, ஐரோப்பிய ஒன்றியமோ கொடுக்கப்போவதில்லை. அவ்வழி ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளில் ஒன்றாக இருக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்