அடுத்த காலண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைதாங்கப் போகிறது போர்த்துக்கல்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை சுழற்சியாக அதன் அங்கத்தவர்களிடையே மாறிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு அங்கத்துவரும் ஆறு மாதங்கள் தலைமைதாங்குவார்கள். தற்போதைய தலைமையை ஜேர்மனி தாங்கிவருகிறது. 

தலைமை தாங்கும் நாடுகள் குறிப்பிட்ட அந்தக் காலப்பகுதியில் தமது முக்கிய குறியாகச் ஒருசில விடயங்களைத் தயார்ப்படுத்திக்கொள்கின்றன. நடந்து முடியும் காலப்பகுதியின் தலைமையிடத்திலிருந்த ஜேர்மனி புதனன்று வெளியிடப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் – சீனா பரஸ்பர முதலீட்டு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதைத் தனது முக்கிய குறியாகக் கொண்டு செயற்பட்டு வெற்றியடைந்தது. 

அடுத்து தலைமை தாங்கப்போகும் போர்த்துக்கல் மூன்று முக்கிய குறிகளை தனது நோக்காக அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவை ஐரோப்பிய ஒன்றியத்தின் தனித்துவத்தைப் பலமைப்படுத்துவது, காலநிலையைக் கட்டுக்குள் கொண்டுவர புதிய ஒரு திட்டத்தைத் தீட்டுதல், ஒன்றியத்தினுள் சமூகங்களைப் பலவகைகளிலும் மேம்படுத்தும் திட்டங்களைக் கொண்டுவருதல் ஆகியைவையாகும்.

அவைகளில் மிக முக்கியமானதாக ஒன்றியக் குடிமக்களுக்கான வேலைவாய்ப்புக்கள், ஆரோக்கிய சேவைகள், கல்வி, அடிப்படைத் தேவைகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்குப் பாடுபடுவதைக் குறிப்பிட்டிருக்கிறார் போர்த்துக்கலின் பிரதமர் அந்தோனியோ கொஸ்தா. ஒன்றியத்துக்குள் இவ்விடயங்களில் பிந்தங்கியிருக்கும் சில பிராந்தியங்களை மற்றவைகளுக்கு ஈடாகக் கொண்டுவருவது ஒன்றியத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை உண்டாக்கும் அவசியங்களில் ஒன்று என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *