ஐரோப்பிய ஒன்றியம் பெருமளவில் முதலீடு செய்யவிருக்கும் இன்னொரு அத்தியாவசிய உதிரிப்பாகம் குறைக்கடத்திகள்.
கொரோனாத்தொற்றுக்காடத்தில் பெரும் விலைகொடுத்து ஐரோப்பிய ஒன்றியம் படித்த பாடமான “அத்தியாவசியத் தயாரிப்பு உதிரிப்பாகங்களுக்கு வேறு கண்டங்களிடம் தங்கியிருக்கலாகாது,” மேலுமொரு தயாரிப்பில் ஐரோப்பிய நிறுவனங்களை உசுப்பிவிடுவதாகியிருக்கிறது. (Semiconductor) எனப்படும் குறைக்கடத்திகளே அவை. சுமார் 43 பில்லியன் எவ்ரோவை குறைக்கடத்திகள் தயாரிப்புக்காக முதலீடு செய்யப்போவதாக செவ்வாயன்று அறிவித்தது.
வீட்டுப்பாவனைக்கான தொழில்நுட்பக் கருவிகள் முதல் வாகனத் தயரிப்புக்கள் வரை குறைக்கடத்திகள் அவசியமானவை. கொரோனாக்கால முடக்கங்களால் அவைகளின் தயாரிப்புப் பெருமளவு குறைந்தது. தயாரித்தவைகள் போக்குவரத்து ஒழுங்கில்லாமையால் தேவையான தொழிற்சாலைக்குக் கிடைக்காமல் போயின. தொடர்ந்தும் அவைக்கான பெரும் தட்டுப்பாடு உலகளவில் நிலவுகின்றது.
ஆசிய நாடுகள், முக்கியமாகத் தாய்வான் குறைக்கடத்திகள் தயாரிப்பில் முன்னணியில் இருந்து வருகிறது. குறைக்கடத்திகளுக்கான ஐரோப்பிய தேவை 2030 இல் சுமார் 30 விகிதம் அதிகமாகும் என்று கணிக்கப்படுகிறது. எனவே, ஐரோப்பிய ஒன்றியம் குறைக்கடத்திகளைத் தயாரிக்கும் நாலு பெரும் தொழிற்சாலைகளை ஒன்றிய நாடுகளுக்குள் கட்டியெழுப்பத் தீர்மானித்திருக்கிறது.
சுமார் மூன்றிலிரண்டு பங்கு முதலீடுகளைத் தனியார் நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்ய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சுமார் 11 பில்லியன் எவ்ரோவை மான்யமாகவும், ஊக்கத்தொகையாகவும் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது நாட்டில் தொழிற்சாலைகளுக்கு மான்யம் கொடுப்பது பொதுவாகவே ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு விடயமாகவே இருந்து வந்திருக்கிறது. எனவே, அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த முதலீடுகள் பற்றி சர்ச்சையும் இருந்து வருகிறது.
சாள்ஸ் ஜெ.போமன்