உக்ரேனுக்குள்ளிருக்கும் இரண்டு பகுதிகளைத் தனிநாடாகப் புத்தின் அறிவித்ததை உக்ரேன் ஜனாதிபதி கண்டித்தார்.
பல கோணங்களிலும் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் அதேசமயம், திங்களன்று ரஷ்ய ஜனாதிபதி உக்ரேனுக்குள் இருந்து பிரியக் கோரிவந்த இரண்டு பகுதிகளைத் தனிநாடுகளாக ரஷ்யா ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். உக்ரேன் ஜனாதிபதி ஸெலின்ஸ்கி அதுபற்றிக் கடுமையான கண்டனம் தெரிவித்து ரஷ்யா தமது நாட்டின் இறையாண்மையை மீறியிருப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்தும் மேற்கு நாடுகளின் ஆதரவைக் கோரியிருக்கும் ஸெலின்ஸ்கி பீதியடைவதற்கு ஏதுமில்லை என்றும், வரவிருக்கும் விளைவுகளுக்கு ரஷ்யாவே பொறுப்பு என்றும் குறிப்பிட்டார்.
திங்களன்று மாலை லுகான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய தாமாகவே தனி நாடுகளாகப் பிரகடனம் செய்துகொண்ட பகுதிகளை ரஷ்யா அங்கீகரிப்பதாக ஜனாதிபதி புத்தின் தொலைக்காட்சி அறிவிப்பின் மூலம் குறிப்பிட்ட போது நீண்ட உரையொன்றை வழங்கியிருந்தார். உக்ரேன் பாரம்பரியமாகத் தனி நாடாக இருக்கவில்லை, ரஷ்யாவின் ஒரு பகுதியே என்று சரித்திர நிகழ்வுகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டினார். அவை தவறானவை என்று ரஷ்ய அறிவியலாளர்கள் பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். உக்ரேனுக்குள் வாழும் ரஷ்யர்கள் மோசமாக நடத்தப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
செவ்வாயன்று காலை ரஷ்யாவின் இராணுவம் லுகான்ஸ்க், டொனெட்ஸ்க் பிராந்தியத்துக்குள் நுழைய புத்தின் உத்தரவிட்டிருக்கிறார். அவர்கள் அங்கே “அமைதி பேணும் கண்காணிப்பாளர்களாக” இருப்பார்கள் என்று புத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஐரோப்பா, ஐக்கிய ராச்சியம், ஐரோப்பியம் ஒன்றியம் ஒரே குரலில் குறிப்பிட்டு வந்த “கடுமையான பொருளாதாரத் தடைகள்” இப்போதைக்கு அமுலுக்கு வராது என்று தெரிவிக்கப்படுகிறது. லுகான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய பகுதிகள் ஏற்கனவே 2014 முதல் அங்கு வாழும் ரஷ்ய ஆதரவு இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. அவர்களுக்கான ஆயுதம் மற்றும் உதவிகளை ரஷ்யா இரகசியமாகச் செய்து வருகிறது. எனவே ரஷ்யா அவற்றை அங்கீகரித்தல், அங்கு படைகளை அனுப்புதல் ஆகியவை ஏற்கனவே நடந்துகொண்டிருப்பவையே, இப்போது உத்தியோகபூர்வமாக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்