ஐரோப்பிய உதைபந்தாட்டக் குழுக்களின் கோப்பைப் போட்டிகள் ரஷ்யாவில் நடக்கக்கூடாது என்கிறார் போரிஸ் ஜோன்சன்.

உக்ரேனிய எல்லைக்குள் ரஷ்யாவின் இராணுவத்தை அனுப்பப் புத்தின் பச்சைக் கொடி காட்டியதைப் பல நாடுகள் கண்டித்திருக்கின்றன. அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கும், டொம்பாஸ் பிராந்தியத்தின் ரஷ்யாவால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் அவைகளின் முக்கியஸ்தர்கள், வங்கிகளுக்கெதிரான பொருளாதார, பயணத் தடைகளை அறிவித்திருக்கின்றன.

ஐக்கிய ராச்சியமும் செவ்வாயன்று ரஷ்யா, டொம்பாஸ் பிராந்தியத்துக்கெதிரான கடுமையான தடைகளை அறிவித்தது. உக்ரேனிய எல்லைக்குள் ரஷ்யா நுழைந்தது சர்வதேச அரசியலமைப்புச் சட்டங்களுக்கெதிரானது என்று கடுமையாக ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் சாடினார். அத்துடன், வரும் மே மாதக் கடைசியில் ரஷ்யாவின் செய்ண்ட். பீட்டர்ஸ்பர்க் நகரில் நடக்கவிருக்கும் ஐரோப்பிய நாடுகளின் உதைபந்தாட்டக் குழுக்களுக்கு இடையிலான Champions League போட்டிகளை அங்கே நடத்த அனுமதிக்கலாகாது என்றும் அவர் குறிப்பிட்டார்.   

‘உக்ரேனுக்கு எதிராகத் தான் எடுத்திருக்கும் அநியாயங்களை நியாயப்படுத்தி உலகளவில் விளம்பரப்படுத்த புத்தின் இது போன்ற விழாக்களைப் பாவிப்பதை நாம் அனுமதிக்கலாகாது. Champions League கோப்பைக்கான இறுதிப்போட்டி ரஷ்யாவில் நடக்கவிருப்பது பற்றி நான் மிகவும் விசனமடைகிறேன். அதைப் பற்றித் தேவையான அதிகாரங்களுடன் நான் தொடர்புகொண்டு விவாதிப்பேன்,” என்று ஐக்கிய ராச்சியத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய உதைபந்தாட்டக் குழுக்களின் ஒன்றியம் [UEFA Champions League] ஐக்கிய ராச்சிய அரசின் கோரிக்கையைப் பற்றி ஆழமாகப் பரிசீலிப்பதாகப் பதிலளித்திருக்கிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்