ஜேர்மனிய எல்லைக்கு ரஷ்யாவின் எரிவாயுவைக் கொண்டுவரும் நோர்ட்ஸ்டிரீம் 2 குளாய்த்திட்டம் நிறுத்தப்பட்டது.

ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்யும் எரிவாயுவில் தனது நாட்டுக்குத் தேவையான எரிசக்திக்குப் பெருமளவில் தங்கியிருக்கும் நாடு ஜேர்மனி. ரஷ்யாவிலிருந்து பால்டிக் கடலுக்குக் கீழே போடப்பட்டிருக்கும் நோர்ட்ஸ்டிரீம் குளாய் ஒன்றின் மூலம் ஜேர்மனிக்கு எரிவாயு கிடைத்தது. அதன் அளவை மேலும் அதிகப்படுத்திக்கொள்ளவும், மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை விநியோகிக்கவும் போடப்பட்டுவந்த மேலுமொரு எரிவாயுக் குளாய்த் திட்டமே நோர்ட்ஸ்டிரீம் 2 ஆகும்.

ரஷ்ய அரசின் நிறுவனமான காஸ்புரோம் முழுவதுமாக முதலீடு செய்திருக்கும் நோர்ட்ஸ்டிரீம் 2 மூலம் ஐரோப்பாவைத் தமது எரிவாயுத் தேவைக்கு ரஷ்யாவையே தங்கியிருக்க வைக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. 90 % தயாராகிவிட்ட அந்தத் திட்டம் நீண்ட காலமாகவே அமெரிக்காவால் வெறுக்கப்பட்டதாகும். ரஷ்யாவிடம் எரிபொருளுக்குத் தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஐரோப்பாவுக்கு வருமானால் அதன் மூலம் ரஷ்யா ஜேர்மனி உட்பட்ட ஐரோப்பிய நாடுகளைத் தனது மிரட்டலுக்கு உட்படுத்தலாம் என்று சுட்டிக் காட்டப்பட்டு வந்தது.

உக்ரேனுக்குள் ரஷ்யா தனது இராணுவத்தை அனுப்பும் பட்சத்தில் ஜேர்மனி அந்தத் திட்டத்திலிருந்து விலகிக்கொள்ளவேண்டும் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கோரி வந்தன. ஆனால், தனது பொருளாதார ஏற்றுமதியின் முக்கிய இறக்குமதியாளர்களாகவும், தமக்கு மலிவு விலையில் எரிசக்தி தருபவர்களாகவும் இருக்கும் ரஷ்யாவுடன் முறித்துக்கொள்ள ஜேர்மனி நீண்ட காலமாகத் தயங்கி வந்தது.

உக்ரேனிலிருந்து விலகும் இரண்டு தனி நாடுகளை ரஷ்யா அங்கீகரித்து உக்ரேனின் எல்லைக்குள் தனது இராணுவத்தை அனுப்பவும் முடிவு செய்ததை அடுத்து ஜெர்மனியின் பிரதமர் ஒலொவ் ஷுல்ட்ஸ் நோர்ட்ஸ்டிரீம் 2 திட்டத்திலிருந்து ஜேர்மனி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்