யாதுமானவள்
தரணி செழிக்கத் தாயாகி
சக்தி யென்றே செயலாகி
இரக்கங் கொண்டே மனுகுலத்தை
ஈண்டு வாழச் செய்வதுபோல்
தரமாய் இல்லம் தழைத்தோங்க
தன்னைத் தியாகம் செய்பவளே
வரமாய் நமக்கு வந்துதித்த
வண்ணத் தாரகை பெண்ணவளே!
ஆவ தெல்லாம் பெண்ணாளே
அன்றே சொல்லி வைத்ததுபோல்
தேவ மகளின் செயலாலே
சிறந்த மக்கள் பெற்றிங்கே
பாவச் செயலில் சிக்காமல்
பண்பாய் வளர்த்தே ஆளாக்கும்
காவல் பணியைச் செய்தேதான்
கல்விக் கண்ணும் திறந்துவைத்தாள்!
பாரதி கண்ட புதுப்பெண்ணாய்
பாரோர் மெச்சப் பலபெண்கள்
ஊரை யாளும் நிலைகண்டோம்
உயிரைக் காக்கும் வினைகண்டோம்
பேரும் புகழும் பெற்றேதான்
பெண்கள் நாளும் உயர்ந்துவர
தீரும் அனைத்துத் தீமைகளும்
சிறப்பாய் இயங்கும் செயல்யாவும்!
எழுதுவது : சி.விஜயலட்சுமி கோவிந்
ஜொகூர், மலேசியா