35 வருடத்தின் கடுங்குளிர்காலத்தையடுத்து வசந்த காலம் நெருங்குவதாக கிரீஸ் காலநிலை அவதான மையம் தெரிவித்தது.
வெள்ளியன்று கிரீஸ் நாட்டின் சில பகுதிகள் 22, 23 பாகை செல்சியஸ் வெம்மையை அனுபவித்தன. கடந்த ஞாயிறன்று அந்த நாட்டின் சில பகுதிகள் – 8 பாகை செல்சியஸ் குளிரால் தாக்கப்பட்டிருந்ததுடன் ஒப்பிடும்போது இது மிகப்பெரிய மாற்றம் என்று நாட்டின் காலநிலை அவதான மையம் தெரிவித்திருக்கிறது.
கிரீஸ் நாட்டை மார்ச் மாதத்தில் அப்பிராந்தியத்தில் நுழைந்த குளிர்காலம் தனது பிடிக்குள் வைத்திருந்தது. அதையடுத்து மாதத்தின் மத்தியில் பிலிப்போஸ் என்று பெயரிடப்பட்ட புயல்காற்று தாக்கியது. நாட்டின் தலைநகரான ஏதன்ஸ் உட்பட நாட்டின் பெரும்பகுதியைப் பனியுடனும், குளிருடனும் தாக்கிய அப்புயல்காற்று மாதம் முடியும்வரை தொடர்ந்தது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அப்புயல் தாக்கியபோது ஆங்காங்கே பாடசாலைகள் மூடப்பட்டன, சில பிரதான வீதிகளும் பனியால் மூடப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சுமார் – 16 பாகை செல்சியஸ் வரை சில நகரங்களில் அளக்கப்பட்டது. தெற்குப் பகுதியிலிருக்கும் தீவுகள் சிலவும் வழக்கத்துக்கு மாறான குளிரைச் சந்தித்தன.