அடுத்தடுத்து இரண்டு வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்ட கிரேக்கர் அவைகளுக்கும் பெயரிட்டுத் தரப்படுத்த விரும்புகிறார்கள்.

காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இயற்கை அழிவுகள் பற்றிய கவனத்தை மக்களிடையே ஏற்படுத்துவது பற்றிப் பல திட்டங்களும் சமீப வருடங்களில் எடுக்கப்பட்டு வருகின்றன. சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் கிரேக்க வானிலை அவதானிப்பாளர்கள் மழைக்கால புயல்கள், சூறாவளிகள் மற்றும் கடும் பாதிப்புண்டாக்கும் இயற்கை அழிவுகளுக்குப் பெயரிட ஆரம்பித்தார்கள். அதேபோலவே, வெப்ப அலைகளையும் தரப்படுத்தி, அவைகளுக்குப் பெயரிட வேண்டுமென்று கிரேக்க விஞ்ஞானிகள் பிரேரித்திருக்கிறார்கள்.

“இன்னும் 20 – 30 வருடங்களில் உண்டாகவிருக்கும் வெப்பத் தாக்குதல்கள் எப்படி இருக்கும் என்பதற்கு இந்தக் கோடை கட்டியம் கூறியிருக்கிறது. எதிர்காலத்தில் இதைவிட அதிக வெம்மையை இதை விட நீண்ட காலத்துக்கு உணரவேண்டியிருக்கும்,” என்கிறார் ஏதென்ஸ் நகரத்திலிருக்கும் நாட்டின் தேசிய காலநிலை அவதான நிலையத் தலைவர் கொஸ்தாஸ் லகூவர்டோஸ்.

புயல், சூறாவளிகள் பற்றிக் கணிப்பதை விட, வெப்ப அலைகள் வருவிருப்பதை இலகுவாகவும், தெளிவாகவும் கணிக்க முடியும். அவைகள் எப்படியானவையாக இருக்கும் என்பதையும் முன்னரே மதிப்பிடலாம். அதனால் அவைக்குப் பெயரிட்டு, மதிப்பிடுவதன் மூலம் அரசியல்வாதிகளை அவைக்கேற்ற தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவும் கட்டாயப்படுத்தலாம் என்கிறார் லகூவர்டோஸ்.

இவ்வருடம் ஜூன் மாதத்திலிருந்து கிரீஸ் இரண்டு வெப்ப அலைகளால் பல பாதிப்புக்களை அடைந்திருக்கிறது. மூன்று வாரங்களாக நாட்டைத் தனது பிடியில் வைத்திருந்த இரண்டாவது வெப்ப அலையின் தாக்குதல் வாரத்தில் நாடு முழுவதிலும் 600 காட்டுத் தீக்களை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து மீண்டும் ஒரு வாரமாக மேலுமொரு வெப்ப அலை கிரீஸைத் தாக்குவதாகக் குறிப்பிடப்படுகிறது. 

இவ்வருடக் கோடையில் சரித்திரத்திலேயே மோசமான அழிவுகளை உண்டாக்கிய வெப்ப அலைகளின் விளைவுகளை “கிரீஸ் இலகுவில் தீப்பிடிக்கும் ஒரு பொருளாகிவிட்டது,” என்று நாட்டின் பிரதமர் குறிப்பிட்டார். அழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 500 மில்லியன் எவ்ரோக்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், இயற்கை அழிவுகளால் ஏற்படும் பாதிப்புக்களை நிவர்த்திசெய்ய ஒரு அமைச்சரையும் நியமித்திருக்கிறார்.

“நாம் மின்சாரம் தயாரிக்கும் முறைகள், கட்டடங்களைக் கட்டும் முறைகள், விவசாய முறைகள் மற்றும் போக்குவரத்து முறைகள் ஆகியவைற்றில் மாற்றங்களை அதி வேகமாக ஏற்படுத்தவேண்டும். காலநிலை மாற்றங்கள் எங்களை இப்போதே, இங்கே தாக்குகின்றன என்று பிரதமர் மித்ஸோதாக்கிஸ் குறிப்பிட்டார்.

அத்துடன் உலகின் முதலாவது நகரமாக ஏதென்ஸ் ஒரு “வெப்பம் கண்காணிக்கும் உத்தியோகத்தர்” (Chief Heat Officer) என்ற பதவியை உண்டாக்கி அதற்குப் பொறுப்பாக எலேனி ம்யுரிவில்லி என்பவரை நியமித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *