பி.பி.சி, டச் வெல் [Deutsche Welle] ஆகியவைகளின் செய்திகளுக்குத் தடை விதித்தார்கள் தலிபான்கள்.
சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் சிறுமிகளுக்கான ஆரம்ப, நடுத்தர பாடசாலைகளைத் திறந்த சில மணி நேரத்திலேயே மூடிவிட்ட ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு தனது நாட்டின் ஊடகங்கள் மீதும் கட்டுப்பாடுகளைப் போட்டு வருகிறது. உள் நாட்டில் ஒலிபரப்பப்படும் வெளிநாட்டு ஊடகங்களின் செய்தி மொழிபெயர்ப்பு நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன.
பேஷ்தோ, பெர்சிய, உஸ்பெக் மொழிகளில் பெயர்க்கப்பட்டு ஆப்கானிஸ்தானில் வெளியிடப்பட்டு வந்த பி.பி.சி செய்தித் தொகுப்பைத் தலிபான்கள் தடை செய்திருப்பதாக ஞாயிறன்று பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்தது. ஜேர்மனியின் முக்கிய ஊடகமான டச் வெல் மொழிபெயர்ப்புச் செய்து உள்நாட்டின் மொழிகளில் ஒலிபரப்பும் செய்திகளையும் தலிபான்கள் தடை செய்திருக்கிறார்கள்.
“சுதந்திரமான ஊடகம் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு அவசியமானதாகும். அதைத் தடை செய்வது ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு தனது பாதையில் முன்பு அவர்கள் ஆண்ட காலத்துக்குத் திரும்புவது போன்ற நடவடிக்கையே,” என்று தடை செய்யப்பட்ட ஊடகங்களின் பிரதிநிதிகள் விமர்சித்திருக்கிறார்கள்.
வொய்ஸ் ஒவ் அமெரிக்காவின் செய்திகள் ஆப்கானிஸ்தானில் ஒலிபரப்பமுடியாமல் செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. தலிபான்களின் பிரதிநிதி ஒருவர் ஊடகங்கள் மீதான தடையை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்