பாகிஸ்தானுடன் மட்டுமன்றி ஈரானுடனும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆயுதத் தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள்.
ஆப்கானிஸ்தானுடன் சுமார் 960 கி.மீ நீண்ட எல்லையைக் கொண்ட நாடு ஈரான். தலிபான்கள் கைப்பற்றியவுடன் சர்வதேசத்தால் கைவிடப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் மோசமாகியிருக்கிறது. அத்துடன், தலிபான்களின் சமூகக் கெடுபிடிகளும் ஆப்கான் மக்களை கிடுக்குப்பிடியில் வைத்திருக்கிறது. எனவே, ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரானுக்குள் தஞ்சம் புகுவதற்காக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வழி தேடுகிறார்கள்.
ஈரான் அமெரிக்காவின் பொருளாதாரக் கட்டுப்பாடுகளால் தவிக்கும் நாடாகும். தனது தயாரிப்புக்களைச் சாதாரணமாக ஏற்றுமதி செய்ய முடியாத ஈரானின் நாணய மதிப்பு கடந்த இரண்டு வருடங்களில் பாதியாகியிருக்கிறது. தனது நாட்டிலேயே பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு ஈரான் ஆப்கானிய அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்க விரும்பவில்லை.
நீண்ட காலமாகவே இரண்டு நாடுகளுக்கு இடையேயும் நடமாட்டம் சகஜமாகவே இருந்து வந்திருக்கிறது. ஆப்கான் மக்கள் ஈரானுக்குள் நுழைந்து அங்கே தொழில் தேடிக்கொள்வதும், வேறு நாடுகளுக்கு அகதிகளாக போவதும் நடந்து வந்திருக்கிறது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியபின் உண்டாகியிருக்கும் நிலைமை ஈரானுக்குப் புதியதாகும். தனது நாட்டினுள் அகதிகளுக்கான உதவிகளைச் செய்ய வசதியில்லை என்று கூறி எல்லையை மூடியிருக்கிறது.
960 கி.மீ எல்லையையும் பாதுகாக்க இயலாததால் ஈரானுக்குள் நுழையும் ஆப்கானிய அகதிகளை ஈரான் சமீப காலத்தில் கைப்பற்றி வெளியேற்றி வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் சுமார் 251,000 ஆப்கானிய அகதிகளை ஈரான் வெளியேற்றியிருக்கிறது. வெளியேற்றப்பட்ட அகதிகள் தம்மை ஈரானியர்கள் மோசமாக நடத்தியதாகக் குறிப்பிட்டு வருகிறார்கள்.
அரசியல் ரீதியாக ஆப்கானிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரான ஹசாராக்களை [ஈரானியர்கள் போன்று ஷீயா மார்க்கத்தினர்] குறிவைத்துக் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடத்தி வருவதை ஈரான் கண்டித்து வருகிறது. சுன்னி இஸ்லாமிய மார்க்கத்தைத் தொடரும் தலிபான்களின் அரசில் ஷியா முஸ்லீம்களுக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமைகள் பற்றி ஈரான் தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறது.
எல்லை மூலமாக அகதிகளுடன் தீவிரவாதிகளும் ஈரானுக்குள் நுழைந்து விடுவது மேலுமொரு பிரச்சினை. கடந்த மாதத்தில் ஈரானின் மிக புனித தலமான மாஷாத் நகரத்துப் பள்ளிவாசலில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவன் முல்லாக்கள் மீது கத்திக்குத்து நடத்தியிருக்கிறான். அவர்களில் இருவர் கொலை செய்யப்பட்டனர். அதன் விளைவாக ஈரானில் வாழும் ஆப்கானர்கள் மீது ஆங்காங்கே வெறுப்புத் தாக்குதல் நடாத்தப்பட்டு வருகிறது.
ஈரானில் ஏற்பட்டிருக்கும் அந்த ஆப்கானிய வெறுப்பு பற்றிய படங்கள், விபரங்கள் ஆப்கானிஸ்தானில் பரவி அங்கே ஈரானுக்கெதிரான நிலைப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானிலிருக்கும் ஈரானியத் துதுவராலயம் தாக்கப்பட்டிருக்கிறது. சில நகரங்களில் மக்கள் கொதித்தெழுந்து “ஈரான் ஒழிக” என்ற சுலோகத்துடன் ஊர்வலங்களை நடத்தி வருகிறார்கள்.
இவற்றைத் தவிர ஈரான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் இரண்டு நாட்டுக் காவலர்களிடையேயும் எல்லைத் தகராறும் ஏற்பட்டிருக்கிறது. வெளிநாடுகளுடன் சுமுகமாக வர்த்தகம் செய்ய முடியாத நிலையிலிருக்கும் இரு நாடுகளும் தமக்கிடையே வர்த்தக உறவுகளைக் கொண்டிருக்கின்றன. எனவே இரண்டு நாட்டு அரசுகளும் தமக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிளவுகள் மேலும் விரிவடைவதை விரும்பவில்லை. ஆனாலும், இரண்டு பக்க மக்களிடையேயும் விரிசல் அதிகமாகியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்