முன்னாள் தலைவரின் வாரிசுடன் உப ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் தேர்தலில் மோதுகிறார்.
மே 09 ம் திகதி திங்களன்று நடக்கவிருக்கிறது பிலிப்பைன்ஸில் ஜனாதிபதித் தேர்தல். மோதிக்கொள்பவர்கள் தற்போதைய உப ஜனாதிபதி லேனி ரொப்ரேடோவும் முன்னாள் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி\சர்வாதிகாரி பெர்டினண்ட் மார்க்கோஸின் மகன் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர் ஆகியோராகும். சுமார் ஒரு வருடத்துக்கும் முன்னரே தற்போதைய ஜனாதிபதி ரொபெர்ட்டோ டுவார்ட்டே மீண்டும் போட்டியிடுவாரா, அல்லது அவரது மகள் களத்திலிறங்குவாரா என்ற வதந்திகளினால் சூடு பிடித்திருந்த தேர்தல் ஒரு வழியாக நடந்தேறவிருக்கிறது.
ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தமது பிரச்சாரத்தை ஆரம்பித்த காலம் முதல் நாட்டின் கருத்துக் கணிப்பீடுகளில் முதலிடத்தில் இருந்து வருகிறார் மார்க்கோஸ் ஜூனியர். எனவே, பெரும்பாலான அரசியல் அவதானிகள் அவரே வெற்றியெடுப்பார் என்று கருதுகிறார்கள். மார்க்கோஸ் ஜூனியர் வெற்றிபெறும் பட்சத்தில் நாட்டை அவர் இரும்புக் கரங்களால் ஆள்வார் என்று பயப்படுகிறார்கள் ஒரு சாரார்.
லேனி ரொப்ரேடோ ஒரு மென்மையான அரசியல் தலைமையைக் கொடுப்பார் என்று கருதுகிறவர்களில் பெரும்பாலானோர் முதல் தடவை வாக்களிக்கப்போகிறவர்களும் இளவயதினருமாகும். நடுத்தர வயதானோரும், முதியவர்களும் மார்க்கோஸ் ஜூனியருக்கே பெருமளவில் ஆதரவாக இருக்கிறார்கள்.
தனது சர்வாதிகார ஆட்சிமுறை காரணமாகப் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டவர் பெர்டினண்ட் மார்க்கோஸ். ஆனால், மகன் மார்க்கோஸ் ஜூனியர் தனது தந்தை மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் பொய்களே என்று சுமார் ஒரு வருடத்துக்கும் முன்னரே பல வகைகளில் திரிபுகள் மூலம் வெளியிட ஆரம்பித்திருந்தார். பெரும் வசதிகளும், நாட்டின் வர்த்தக சமூகத்தின் ஆதரவும் பெற்ற மார்க்கோஸ் ஜூனியரின் அப்படியான பொய்ப்பிரச்சாரங்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்ததாகச் செய்திகள் பல வெளியாகியிருந்தன.
பிலிப்பைன்ஸ் நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 67 மில்லியன் ஆகும். அவர்களில் பெரும்பாலானோர் – சுமார் 80 விகிதத்தினர் – வாக்குச் சாவடிகளுக்குச் செல்வார்கள் என்று கணிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்