ஆஸ்ரேலியாவால் தாம் அவமானப்படுத்தப்பட்டதே சீனாவுடன் தாம் ஒப்பந்தம் செய்யக் காரணம் என்கிறார் சாலமொன் தீவுகளின் பிரதமர்.
சாலமன் தீவுகளின் அரசு சமீபத்தில் தமது நாட்டின் பாதுகாப்பு, அபிவிருத்தி ஆகியவைகள் பற்றிய ஒரு ஒப்பந்தத்தைச் சீனாவுடன் செய்துகொண்டது. தென் சீனக் கடற்பிராந்தியத்தின் பெரும்பாகத்தைத் தனதாகப் பிரகடனம் செய்துகொண்டு மற்றைய நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்துவரும் சீனாவை எதிர்கொள்ள அப்பிராந்தியத்தில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்ரேலியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. அச்சமயத்தில் சாலமன் தீவுகள் சீனாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் விபரங்கள் முழுமையாகப் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்று சந்தேகம் எழுப்பப்பட்டிருக்கிறது.
ஆஸ்ரேலியாவும், அமெரிக்காவும் குறிப்பிட்ட ஒப்பந்தங்கள் பற்றிக் கேள்விகளை எழுப்பி விமர்சித்ததற்குச் சாலமன் தீவுகளின் பிரதமர் தனது பாராளுமன்றத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார்.
“எங்களை விமர்சிப்பவர்களின் பக்கத்திலிருந்து எங்கள் மீதான அவநம்பிக்கை எப்போதும் காட்டப்பட்டது. சீனாவுடனான ஒப்பந்தத்தில் நாம் விசனப்படும்படியாக ஏதுமில்லை,” என்று சாலமன் தீவுகளின் பிரதமர் மனஸ்ஸே சொகவாரே குறிப்பிட்டார்.
“நாம் ஒரு பாலர் வகுப்பில் இருப்பதாகவும் அவர்கள் எங்களைத் துப்பாக்கிகளுடன் கண்காணிக்க வேண்டும் போன்ற வகையில் எங்களை அவர்கள் நடத்தினார்கள். அவர்கள் சொல்வதை நாம் கேட்டு நடக்காவிட்டால் எங்கள் நாட்டின் மீது ஆக்கிரமிப்புச் செய்வதாகவும் மிரட்டினார்கள்,” என்று அவர் ஆஸ்ரேலியாவுடன் தாம் முன்னர் செய்துகொண்டிருந்த ஒப்பந்தச் சமயத்தில் தாம் எப்படிக் கையாளப்பட்டோம் என்பதை விபரித்தார்.
ஆஸ்ரேலியாவுக்குச் சுமார் 2,000 கி.மீ தூரத்திலிருக்கும் சாலமொன் தீவுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் பேண முடியாதது பற்றி ஆஸ்ரேலியப் பிரதமர் மொரிசன் மீது விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. ஆஸ்ரேலிய மக்கள் விரைவில் பொதுத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறார்கள். அச்சமயத்தில் ஆஸ்ரேலியாவின் பின் காணிக்குள் சீனா ஒரு நாட்டுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதைத் தடுக்க முடியாமை அவரது கட்சிக்கு இழப்பாகலாம் என்று கருதப்படுகிறது.
சொகவாரேயின் விமர்சனங்களுக்குக் காதுகொடுக்கவேண்டாம் என்று பிரதமர் மொரிசன் ஆஸ்ரேலியர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். தாம் சாலமன் தீவு மக்களைக் குடும்பத்தினர் போலக் கௌரவமாக நடத்தியதாக அவர் குறிப்பிடுகிறார்.
சாலமன் தீவுகளின் தலைநகரான ஹொனியாராவில் கடந்த நவம்பரில் பிரதமர் சொகவாரேயின் ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சிகள் உண்டாகின. அச்சமயத்தில் ஆஸ்ரேலியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையைக் கொண்டிருந்த சாலமன் தீவுகளுக்குச் சுமார் 100 பொலீசார் அனுப்பப்பட்டார்கள். பாபுவா நியூகினியா, நியூசிலாந்து, பிஜி தீவுகளிலிருந்து இராணுவத்தினரும் அமைதி பாதுகாக்கும் படையும் அனுப்பப்பட்டது.
கிளர்ச்சியாளர்கள் ஹொனியாராவின் பகுதியான சைனாடவுனின் பெரும்பாகத்தைத் தீவைத்து அழித்தார்கள். அங்கிருந்த சீன வர்த்தகர்களுக்கும், சீனாவின் தூதுவராலயத்துக்கும் பாதுகாப்பு வேண்டுமென்று பிரதமர் சொகவாரே ஆஸ்ரேலியாவுடன் வேண்டிக்கொண்டபோது அது மறுக்கப்பட்டது என்றும் சொகவாரே குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்