சொலொமொன் தீவுகள் பாதுகாப்பு உடன்படிக்கையொன்றைச் சீனாவுடன் செய்துகொள்வதை விரும்பவில்லை ஆஸ்ரேலியா.
ஆஸ்ரேலியாவுக்கு வெளியே சுமார் 2,000 கி.மீற்றர் தூரத்திலிருக்கின்றன சொலொமொன் தீவுகள். தீவுகளாலான அந்த நாட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 800,000 ஆகும். நீண்ட காலமாக ஆஸ்ரேலியாவுடன் பாதுகாப்புக் கூட்டணியிலிருந்த சொலொமொன் தீவுகளின் அரசு சீனாவிடம் தனது பாதுகாப்புக்காக ஒப்பந்தம் செய்துகொள்ளத் திட்டமிடுவதை விசனத்துடன் கவனிக்கிறது ஆஸ்ரேலியா.
2019 இல் சொலொமொன் தீவுகள் சீனாவுடன் உறவுகளை நெருக்கமாக்கிக்கொண்டு தாய்வானுடனான உறவுகளை வெட்டிக்கொண்டன. தாய்வான் தனது நாட்டின் ஒரு பகுதி என்று கருதும் சீனா உலகின் பல நாடுகளுக்குப் பொருளாதார உதவிகள் செய்வதாக ஒப்பந்தம் செய்துகொள்ளும்போது குறிப்பிட்ட நாடுகள் தாய்வானுடன் உறவுகளை வெட்டிக்கொள்ளவேண்டும் என்றும் நிர்ப்பந்தித்து வருகிறது.
அதற்குச் சொற்ப காலத்துக்கு முன்னர்தான் ஆஸ்ரேலியா பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை சொலமொன் தீவுகளுடன் செய்திருந்தது. அதன்படி அந்தத் தீவுகளில் ஸ்திர நிலைமைக்கு உதவ 50 பொலீசாரையும் அங்கே பணியிலமர்த்தியிருக்கிறது. அதைத் தவிர அதற்கு முன்னர் அத்தீவுகளுக்கு இராணுவப் பாதுகாப்பும் வழங்கியிருந்தது.
சமீபத்தில் சீனா பசுபிக்கிலிருக்கும் அந்தத் தீவுகளுடன் செய்திருக்கும் ஒப்பந்தமும் பாதுகாப்புக்கும் அபிவிருத்திக்கும் உதவுவதாகக் குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட ஒப்பந்தம் சொலமொன் தீவுகளின் அரசாங்கத்தின் அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கிறது. அதன்படி அத்தீவுகளின் தலைநகரில் சீனா தனது இராணுவத் தளத்தையும் நிர்ணயிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அங்கே சீனா ஈடுபடும் அபிவிருத்தித் திட்டங்களின் பாதுகாப்புக்காகச் சீன இராணுவத்தின் பாதுகாப்பை வழங்கலாம் என்றும் ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.
“பசுபிக் சமுத்திரப் பிராந்தியத்திலிருக்கும் நாடுகள் எமது பகுதியில் ஸ்திரமான நிலபரத்தையும், அமைதியையும் விரும்புகிறோம். இதற்குள் வேறு நாடுகள் தலையிடுவது எங்களுக்கு விசாரத்தை உண்டாக்குகிறது,” என்று ஆஸ்ரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் குறிப்பிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ.போமன்