புதிய ஜனாதிபதி பதவியேற்றிருக்கும் தென் கொரியாவுக்கு அடுத்த வாரம் ஜோ பைடன் விஜயம்.
தென் கொரியாவின் பாரம்பரியம் பேணும் கட்சியைச் சேர்ந்த யூன் சுக் – யேயோல் [Yoon Suk-Yeol] பதவியேற்ற கையோடு ஒரு முக்கிய சர்வதேசத் தலைவர் நாட்டுக்கு விஜயம் செய்யவிருக்கிறார். ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் விஜயத்தின் போது இரண்டு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தமும், வட கொரியாவின் சமீப கால அணு ஆயுத மிரட்டல்கள் பற்றியும் முக்கியமான பேசுபொருளாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தென்கொரியாவின் முன்னாள் அரச தலைமை வழக்கறிஞர் ஜனாதிபதிப் பதவியேற்றார். – வெற்றிநடை (vetrinadai.com)
முன்னாள் அரச வழக்கறிஞர் நாயகம் என்ற முறையில் உள் நாட்டு விடயங்களில் யூன் சுக் – யேயோலுக்கு இருக்கும் பரிச்சயம் வெளிவிவகார உறவுகளில் இருக்கிறதா என்று பரிசோதிக்கும் சந்திப்பாக அது அமையும் என்கிறார்கள் தென் கொரிய அரசியல் அவதானிகள். தனக்கு முன்னரிருந்த ஜனாதிபதி வட கொரியாவுடன் மெதுமையாக நடந்துகொண்டார் என்று விமர்சனம் செய்யும் யூன் சுக் – யேயோல் அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேலும் விஸ்தரிக்கவிருப்பதாகத் தெரிவிக்கிறார்.
வட கொரியத் தலைவர் கிம் யொன் உன் ஏப்ரல் மாதக் கடைசியில் தனது உரையில் தனது நாடு அணு ஆயுதத்தைத் தொடர்ந்தும் பரிசீலிக்கத் தயார் என்று குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமன்றி அதைத் தனது எதிரிகள் மீது பிரயோகிக்கவும் தயார் என்று குறிப்பிட்டிருந்தார். அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி தென் கொரியாவில் விஜயம் செய்யும் தருணத்தில் கிம் யொன் உன் அணு ஆயுதப் பரிசோசனையைச் செய்யலாம் என்றும் ஊகங்கள் வெளியிடப்படுகின்றன.
யூன் சுக் – யேயோல் தேர்தல் வெற்றியின் பின்னர் நாட்டு மக்களிடையே நடாத்தப்பட்ட கணிப்பீட்டில் 41 % மட்டுமே அவர் நல்லாட்சி கொடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். அவருக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த மூன் ஜே-இன் பதவியிழக்க முன்னர் 45 % மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்