தென்கொரியாவின் முன்னாள் அரச தலைமை வழக்கறிஞர் ஜனாதிபதிப் பதவியேற்றார்.

தென் கொரிய மக்கள் சமீபத்தில் நடந்த தேர்தலில் தெரிவுசெய்த ஜனாதிபதி யூன் சுக் – யேயோல் [Yoon Suk-Yeol] செவ்வாயன்று பதவியேற்றார். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை உலகில் பத்தாவது இடம், சுமார் அரை மில்லியன் பேரைக்கொண்ட நவீன இராணுவம் ஆகியவற்றுடன் கொரியத் தீபகற்பத்தின் தெற்கிலிருக்கும் தென் கொரியா தனது பக்கத்து நாடான வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலுடன் வாழும் நாடாகும்.

தனது தேர்தல் பிரச்சாரத்தில் தான் வட கொரியாவின் மிரட்டல்களுக்குத் தளம்பாமல் கடுமையாக நடந்துகொள்வேன் என்று உறுதிகூறியிருந்த யூன் சுக் – யேயோல் தனது பதவியேற்பின்போது அதைக் கடுமையாக உச்சரிக்காமல் அமுக்கியே பேசினார். “வடகொரியாவே எங்களின் முக்கிய எதிரி நாடு,” என்று குறிப்பிட்டு வந்திருந்தார்.

பதவியேற்கும்போது தனது உரையில்  “வடகொரியா தனது அணு ஆயுதங்களை அழித்துவிடவேண்டும். அது எங்களுக்கு மட்டுமல்ல உலகுக்கே ஒரு ஆபத்தை உண்டாக்குகிறது. அதை அவர்கள் செய்வதானால் அவர்களுடைய நாட்டுக்கு நாம் பெருமளவில் பொருளாதார உதவி செய்யத் தயாராக இருக்கிறோம். அதன் மூலம் அவர்களுடைய மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நாம் ஒன்று சேர்ந்து உழைக்கலாம். அவர்கள் திறந்த மனதுடன் எங்களோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளவேண்டும். அதற்கான கதவுகள் எப்போதுமே திறந்திருக்கின்றன,” என்று குறிப்பிட்டார்.

வட கொரியா யூன் சுக் – யேயோலின் பேச்சுவார்த்தை அழைப்பைக் கொஞ்சமேனும் பொருட்படுத்தும் என்று எவரும் நம்பவில்லை. 

வட கொரியத் தலைவர் கிம் யொன் உன் ஏப்ரல் மாதக் கடைசியில் தனது உரையில் தனது நாடு அணு ஆயுதத்தைத் தொடர்ந்தும் பரிசீலிக்கத் தயார் என்று குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமன்றி அதைத் தனது எதிரிகள் மீது பிரயோகிக்கவும் தயார் என்று குறிப்பிட்டிருந்தார்.

வட கொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனைக்கான இடம் தயாராக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவிக்கிறது. மே மாதக் கடைசியில் அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் ஒரு சிறிய அணு ஆயுதப் பரிசோதனை செய்ய வட கொரியா திட்டமிட்டு வருவதாகவும் அமெரிக்கப் வெளிவிவகார அமைச்சின் அறிக்கை குறிப்பிடுகிறது. 

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த 2018 ஆண்டுப் பகுதியில் நம்பிக்கையை வளர்ப்பதற்காக Punggye-ri பகுதியில் அத்தருணத்தில் அணு ஆயுதத்தைப் பரீட்சிப்பதற்காக உண்டாக்கப்பட்டிருந்த சுரங்கங்கள் அழிக்கப்பட்டன. ஆனால், அப்பேச்சுவார்த்தைகள் வட கொரியா எதிர்பார்த்தபடி நடக்காததால் அதே பிராந்தியத்தில் மீண்டும் பரிசோதனைக்கான சுரங்கங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிடப்படுகிறது.

பாதுகாப்பைப் பொறுத்தவரை அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக விளங்கும் தென் கொரியா பொருளாதார, வர்த்தக விடயங்களில் சீனாவின் நெருங்கிய நட்பு நாடாகும். எனவே, இரண்டு வல்லரசுகளுடனும் தளம்பாத உறவைக் கொண்டு முன்னேறுவது தென்கொரிய அரசியலுக்கு அவசியமானதாகும்.

ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் யூன் சுக் – யேயோல் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணியை அனுசரித்துப் போவதும் அவசியமாகும். 2024 நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் யூன் சுக் – யேயோல் ஆதரவுக் கட்சி பெரும்பான்மையைக் கைப்பற்றாத வரையில் அவரால் முழுச் சுதந்திரத்துடன் தனது திட்டங்களைச் செயற்படுத்த முடியாத நிலையே இருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *