தென்கொரியத் தலைநகரில் நடந்த ஹலோவீன் நிகழ்ச்சியில் நெரிபட்டு சுமார் 146 பேர் மரணம்.

சியோல் நகரின் சனிக்கிழமையன்று இரவு நடந்த ஹலோவீன் நிகழ்ச்சிகளிடையே கூட்ட நெரிசலுக்குள் சுமார் 146 பேர் மரணமடைந்திருப்பதாக நாட்டின் மீட்புப் படையினரின் செய்தி தெரிவிக்கிறது. ஒரு சிறிய வீதியொன்றுக்குள் அளவுக்கதிகமானோர் ஒரே சமயத்தில் நுழைந்ததால் நெரிசல் ஏற்பட்டதாகவும் அதற்குள் அவர்கள் இடிபட்டு, மிதிபட்டு இறந்ததாகவும் தெரிகிறது.

இறந்தவர்களில் 13 பேரின் உடல்களை அகற்றி மருத்துவமனைக்கு அனுப்பியிருப்பதாகவும் மற்றவர்களின் உடல்கள் தொடர்ந்தும் வீதியிலேயே கிடப்பதாகவும் சியோல் நகரத் தீயணைப்புத்துறையின் தலைவர் செய்திகளுக்குத் தெரிவித்தார். மற்றும் பலர் காயமடைந்திருக்கிறார்கள். அவர்களைக் கவனிப்பதில் 140 வாகனங்களும் 400 மீட்புப் படையினரும், மற்றும் பல அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தென் கொரிய அரசு அப்பகுதியில் இருப்பவர்களுக்குக் குறுஞ்செய்திகளை அனுப்பி எல்லோரையும் வீடுகளுக்குத் திரும்பும்படி கேட்டுக்கொண்டிருக்கிறது. சமூகவலைத்தளங்களில் அந்த நெருக்கமான வீதியில் அவசர உதவி வாகனங்களும், தீயணைப்புப்படை வாகனங்களும் குவிந்திருப்பதைக் காட்டும் படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்தக் குறுகிய வீதிப்பகுதியில் சுமார் 100,000 பேர் குவிந்ததாக உள்ளூர்ச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

கொரோனாக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் அந்தப் பகுதியில் நடக்கும் முதலாவது ஹலோவீன் கொண்டாட்டம் இதுவென்பதால் அந்த நிகழ்ச்சிகள் பலரையும் ஈர்த்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *