ஆயுதங்களைத் தனியார் வாங்குவது, வைத்திருப்பது பற்றிய கடுமையான சட்டங்கள் கனடாவில் வரலாம்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கடந்த வாரம் பாலர் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் அமெரிக்காவில் மட்டுமன்றி உலகெங்கும் அதிர்ச்சியைக் கொடுத்தன. அக்கொலைகள், அமெரிக்காவின் வடக்கிலிருக்கும் கனடாவில் தனியாருக்கு ஆயுதங்கள் விற்பனை செய்தல் பற்றிய கடுமையான சட்டங்களைக் கொண்டுவரும் எண்ணத்தை உண்டாக்கியிருக்கின்றன.
கண்டிய அரசு நாட்டில் தனியார்கள் ஆயுதங்கள் வைத்திருப்பது பற்றிய சட்டங்களைக் கடுமையாக்குவதற்கு முடிவெடுத்திருப்பதாக பிரதமர் ஜஸ்டின் டுருடூ தெரிவித்தார். ஒரு கையில் வைத்துப் பாவிக்கக்கூடிய ஆயுதங்களான பிஸ்டல், ரிவால்வர் ஆகியவற்றை விற்பதும், இறக்குமதி செய்வது தடை செய்யப்படவிருக்கின்றன.
கனடாவில் வாழ்பவர்கள் விளையாட்டுகளுக்காகவும், பாதுகாப்புச் சேவையிலுள்ளவர்களின் பாவனைக்காகவும் மட்டுமே ஆயுதங்களை வைத்திருந்தால் போதுமானது என்று பிரதமர் குறிப்பிட்டார். மற்றைய சாதாரண மக்களுக்கு ஆயுதங்கள் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.
வீட்டில் வன்முறைகளில் ஈடுபட்டவர்களின் ஆயுதங்கள் வைத்திருக்கும் அனுமதி பறிக்கப்படும். உண்மையான ஆயுதங்களைப் போன்று தோற்றமளிக்கும் விளையாட்டு ஆயுதங்களின் விற்பனையும் நிறுத்தப்படவிருக்கின்றன. முன்வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் பற்றிய சட்டங்களை நிறைவேற்றக் கனடிய பாராளுமன்றத்தில் பலமான ஆதரவு இருப்பதாகக் கணிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்