கனடா தேசமும் பழங்குடியினர் துயரமும் – 1

கனடா எனும் நாடு பிறந்து இந்த ஆண்டுடன் 155 வருடங்கள் ஆகின்றன. இந்த நாள் வருடாவருடம் கனடிய மக்களால் பெரும் கொண்டாட்டமாக கலை நிகழ்வுகள், பேரணிகள், வாண வேடிக்கைகளுடன் கொண்டாடப்படும் ஒரு நாளாக இருந்து வருகிறது. கனடா தேசத்தின் மூத்த குடிகளான பழங்குடிகள் தமக்கு கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட அநீதிகளின் காரணமாக பல கசப்புணர்வுடன் இருந்தாலும் கடந்த காலங்களில் அவர்களும் கனடா தினக் கொண்டாட்டங்களில் ஓரளவுக்குக் கலந்து கொண்டனர்.

 

ஆனால், கனடியர்கள் கனடா தேசத்தின் 150வது பிறந்த நாள் கொண்டாடிய 2017ம் வருடத்தில் பழங்குடியினர் தமது அதிருப்தியை  மிகவும் பலமான குரலில் தெரிவித்தனர். ஏற்கனவே அவர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள், பாலியல் தாக்குதல்கள், படுகொலைகள் என்பனவற்றுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அத்துடன், கனடிய தேசத்தின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் பழங்குடி மக்களின் பங்களிப்பு இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டதென்ற குற்றச்சாட்டையும் பழங்குடியினர் இந்த எதிர்ப்பின்போது முன்வைத்தனர்.

 

வதிவிடப் பாடசாலைகள் மூலம் பழங்குடிச் சிறுவர்களின் சுய அடையாளத்தை முழுமையாக சிதைத்தமை, பழங்குடிச் சிறுமிகள், பெண்களை தொடர்ச்சியாக கொன்றமை அல்லது காணாமல் போகச் செய்தமை, காவல்துறையின் பாரபட்சமான அணுகுமுறை பல சந்தர்ப்பங்களில் அரசின் பாராமுகம் என்பன இன்றும் தொடரும் துயரங்களாக இருக்கின்றன.

 

இவர்களது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் பழங்குடிப் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள், கொலைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவும் (2019) அமைந்தது. அதைத் தொடர்ந்து கடந்த வருடம் வதிவிடப் பாடசாலைகள் அமைந்திருந்த இடங்களுக்கருகில் கண்டுபிடிக்கப்பட்ட அடையாளப்படுத்தப்படாத பழங்குடிச் சிறுவர்களின் புதைகுழி விவகாரம் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக அமைந்தது.

 

தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இன்றுவரை முறையான தீர்வு வழங்கப்படாத நிலையில் கனடா தினத்தைக் கொண்டாடுவது தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான தமது குரலைத் தாங்களே நீர்த்துப் போகச் செய்யும் செயல் என்பது அவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது. இதன்மூலம் தாம் மேலும் புறக்கணிக்கப்பட்ட சமூகமாக இருக்கும் நிலைப்பாடு நீடித்திருக்கவே சந்தர்ப்பம் அதிகமாக இருப்பதாகவே அவர்கள் கருதுகிறார்கள்.

 

வதிவிடப் பாடசாலைகள்

கனடாவில் கிறிஸ்தவ அமைப்பின் நேரடிக் நிர்வாகத்தின் கீழ் 1831 இல்  ஆரம்பிக்கப்பட்ட வதிவிடப் பாடசாலைகள் 1990களின் பிற்பகுதிவரை கனடாவில் இயங்கிக் கொண்டிருந்தன. அதாவது பழங்குடியினரின் பிள்ளைகளை நாகரிக உலகில் இணைக்கிறோம், அவர்களுக்கு கல்வியறிவை வழங்குகிறோம் என்ற பெயரில் சந்ததி சந்ததியாக நான்கு நூற்றாண்டுகளாக மிகப் பெரும் மனித உரிமை மீறல்களை கனடா தேசம் செய்து வந்தது.

 

மேலோட்டமாகப் பார்த்தால் பழங்குடியின சிறுவர்களின் மேம்பாட்டுக்கான செயற்பாடாகத தோன்றினாலும் அங்கு இடம் பெற்ற பல விடயங்கள் அதற்கு மாறானவையாகவே இருந்தன.

 

அங்கு பலாத்காரமாகக் கொண்டுவரப்பட்ட சிறுவர்களின் பெயர் மாற்றப்பட்டன; அவர்களின் இயற்பெயர்களைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது; தமது தாய் மொழியை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது; அவர்களது கலாச்சாரப் பழக்க வழக்கங்களுக்கு அனுமதி இருக்கவில்லை; மீறியவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்; பிள்ளைகள் தமது பெற்றோரைச் சந்திக்க அனுமதியளிக்கப்படவில்லை; அனைவரும் கிறிஸ்தவ மதத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார்கள்;

அங்கு உண்மையில் அவர்களுக்கு மிகவும் தரம் குறைவான  கல்வியே வழங்கப்பட்டது. உதாரணமாக தரம் எட்டில் இருந்த ஒரு மாணவனுக்கு தரம் மூன்று மட்டத்திலான கல்வியறிவே வழங்கப்பட்டது; மொழி, கணிதம் மற்றும் சமயம் ஆகிய மூன்று பாடங்கள் மட்டும் தகுதியற்ற ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டன; அவர்கள் தினமும் பாதிநேரம் விவசாய நிலத்திலும் மரவேலை, கட்டிட வேலை போன்றவற்றில் வேலை செய்யவும் நிர்பந்திக்கப்பட்டார்கள்.

 

அவர்களுக்குப் போதுமான மற்றும் போசாக்கான உணவு வழங்கப்படவில்லை;அங்கிருந்த மாணவர்கள் பலர் உடல்ரீதியாகத் தாக்கப்பட்டார்கள்; தண்டனை என்ற பெயரில் சிறு அறைகளில் அடைத்து வைக்கப்பட்டார்கள்; பாலியல் பலாத்காரத்திற்கும் உள்ளாக்கப்பட்டார்கள்;

 மொத்தத்தில் இது ஒரு திட்டமிட்ட, அரசின் அனுசரணையுடன் இடம்பெற்ற இருநூறு வருட வரலாறு கொண்ட கலாச்சார ரீதியான இனவழிப்பு ஆகும். இது தொடர்பான அரசின் பொறுப்புக் கூறலை நிர்பந்தித்த முன்னாள் வதிவிடப் பாடசாலை மாணவர்களின் போராட்டம், 2007இல் இந்திய வதிவிடப் பாடசாலைகள் தீர்வு ஒப்பந்தம் உருவாக வழிவகுத்தது. அதன்பின்னர் 2008 இல் அப்போதைய பிரதமராக இருந்த ஸ்டீபன் ஹார்பர் பழங்குடியினரிடம் அரசின் சார்பாக மன்னிப்புக் கேட்டார். அதே காலப்பகுதியிலும் பின்னரும் வதிவிடப் பாடசாலைகளுடன் சம்பந்தப்பட்டிருந்த பல கிறிஸ்தவ மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் பழங்குடியினரிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார்கள்.

 அடையாளப்படுத்தப்படாத பழங்குடிச் சிறார்களின் கல்லறைகள்  

நூற்றைம்பது வருடங்களுக்கு மேலாக தமது குடும்பங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட 150,000 சிறார்கள் அனுபவித்த கொடுமைகளில் சிலவே மேலே மிகச் சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளன. அப்படிக் கொண்டு செல்லப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கடைசிவரை தமது வீட்டுக்குத் திரும்பவில்லை. அவர்களுக்கு என்ன ஆனது என்றும் அவர்களின் பெற்றோருக்கு அறிவிக்கப்படவுமில்லை.

 ஆனால் கடந்த வருடம் (2021) தொல்லியல் ஆய்வாளர்களினால் Kamloops, British Columbia வில் கண்டறியப்பட்ட  அடையாளப்படுத்தப்படாத 215 கல்லறைகள் அந்தத் தேடலுக்கு பதில் வழங்கியிருந்தது. இது ஏற்கனவே பெரும் விரக்தியிலும் அரசின் செயற்பாடுகள் தொடர்பாக வெறுப்பிலும் இருந்த பழங்குடியினரை மேலும் வேதனைக்கும் கோபத்திற்கும் உள்ளாக்கும் ஒரு விடயமாகியது. இந்த 200 கல்லறைகளைத் தொடர்ந்து Saskatchewanஇல் மேலும் 751 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

 2017இல் வதிவிடப் பாடசாலைகள் தொடர்பில் போப் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் வேண்டுகோளை நிராகரித்த போப் அலுவலகம் பழங்குடியினரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய சூழ்நிலையை இந்தக் கல்லறை விவகாரம் ஏற்படுத்தியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

பழங்குடியினர் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சனைகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

எழுதுவது ; வீமன் , கனடா

(தொடரும்)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *