பாடசாலைக் கொலைகளுக்கு அடுத்ததாக டெக்சாஸில் அமெரிக்காவின் மிகப் பெரிய ஆயுத விற்பனை விழா.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் யுவால்டி நகரில் ஓரிரு நாடுகளுக்கு முன்னர் ஆரம்பப் பாடசாலைக் குழந்தைகளைக் கொன்றழித்த சம்பவம் உலகளவில் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகள் இன்னும் ஓயவில்லை. அதே மாநிலத்தில் அமெரிக்காவின் ஆயுதப் பாவனை ஆதரவு அமைப்பின் [ National Rifle Association] வருடாந்தர மாநாடும், ஆயுத விற்பனை விழாவும் வெள்ளியன்று ஆரம்பமாகிறது. 

யுவால்டி நகரத்தில் நடந்த கோரச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டிக் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை நிறுத்தும்படி பலர் வேண்டிக்கொண்டும் அதை உதாசீனப்படுத்திவிட்டு ஆரம்பமாகிறது ஹியூஸ்டன் நகரில் அந்த மாநாடு. அமெரிக்க அரசியல்வாதிகளிடையே நாட்டில் ஆயுத விற்பனையைத் தாராளமாக்கும்படி வேண்டிக்கொள்ளச் சகல வழிகளிலும் செயற்பட்டு வரும் அமைப்பு National Rifle Association ஆகும்.

நடக்கவிருக்கும் மாநாட்டில் கலந்துகொள்ளச் சுமார் 55,000 பேர் நாடெங்குமிருந்து வருவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது. அந்த அமைப்பின் மொத்த உறுப்பினர்கள் சுமார் 5 மில்லியன் பேராகும். ஆயுதங்கள் பலவற்றை நிறுவனங்கள் சந்தைப்படுத்துவது தவிர அரசியல் கூட்டங்களும் அங்கே நடைபெறவிருக்கின்றன. டெக்சாஸ் ஆளுனருடன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

யுவால்டி நகரக் கொலைகளில் பாவிக்கப்பட்ட துப்பாக்கியைத் தயாரிக்கும் நிறுவனம் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளாமல் பின்வாங்கிவிட்டது. அத்துடன் மாநாட்டின் கலாச்சார நிகழ்ச்சிகளில் மேடையேறவிருந்த மூன்று பிரபல நட்சத்திரங்களும் தம்மால் பங்குகொள்ள முடியாதென்று மறுத்துவிட்டனர்.

ஆயுதங்கள் விற்பனையைக் கட்டுப்படுத்தும்படியும், இஷ்டப்படி எவரும் ஆயுதங்கள் வாங்குவதை அனுமதிக்காமலிருக்கும்படியும் கோரும் பல அமைப்புக்கள் மாநாடு நடக்கும் சமயத்தில்  ஊர்வலங்களை நடத்தவிருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *