நடா, பிரியா முருகப்பன் குடும்பத்தினருக்குத் தற்காலிக விசா கொடுத்துக் காவலிலிருந்து விடுவித்தது ஆஸ்ரேலிய அரசு.

ஆஸ்ரேலியாவின் புதிய அரசாங்கம் பதவியேறிய பின்னர் நடக்கும் முக்கிய அரசியல் பாதை மாற்றமாக நாட்டின் அகதிகள் சட்டங்களில் மாறுதல்கள் ஏற்படும் என்று கோடிட்டுக் காட்டப்படுகிறதா? முன்னாள் அரசு ஒற்றைக் காலில் நின்று நிறைவேற்றிவந்த, “கப்பல்களில் களவாக வரும் அகதிகள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்,” என்ற நிலைப்பாட்டின் அடையாளமாகச் சர்வதேச அளவில் ஈழத்தமிழர்களான  நடா, பிரியா முருகப்பன் இருந்தார்கள். கப்பலில் வந்து அகதிகளாகக் கோரிய அவர்களை நாட்டுக்கு வெளியே தடை முகாமில் வைத்திருந்தது ஆஸ்ரேலிய அரசு. 

குடும்பத்தினரின் மகளான தர்ணிகாவுக்கு ஏற்பட்ட கடும் காய்ச்சல் தக்க தருணத்தில் கவனிக்கப்படாததால் ஏற்பட்ட கடும் வியாதியால் அக்குடும்பத்தினரை ஆஸ்ரேலிய நகரொன்றுக்கு மாற்றி அங்கே மருத்துவ உதவி ஒழுங்குசெய்தது முன்னாள் அரசு. அக்குடும்பம் அந்த நகரத் தடை முகாமொன்றில் வாழ்ந்து வருகிறார்கள்.

தேர்தலில் வெற்றிபெற்ற ஆட்சியமைத்திருக்கும் தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தோனி அல்பனீஸ், “மூன்று வருடங்களுக்கு முன்னர் நான் முருகப்பன் குடும்பத்தினரை அவர்கள் வாழும் நகரில் சென்று சந்தித்தேன். அந்த நகர மக்கள் அவர்கள் நால்வரையும் எவ்வளவு விரும்புகிறார்கள் என்றும் தெரிந்துகொண்டேன். இன்று எமது அரசு அக்குடும்பத்தினர் தடை முகாமிலிருந்து வெளியேறி வீடொன்றில் வசிக்கும் ஏற்பாட்டைச் செய்திருக்கிறது,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆட்சிக்கு வரமுதல் தொழிலாளர் கட்சியினர் தாம் முன்னைய அரசைப் போலவே கடுமையான அகதிகள் சட்டங்களைத் தொடருவதாகக் குறிப்பிட்டிருந்தார்கள். அதே சமயம் நாட்டுக்கு வெளியே அகதிகளை வைத்திருக்கும் தடைமுகாம் வசதிகளை மாற்றுவதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

நடா, பிரியா முருகப்பன் ஆகியோர் 2012, 2013 இல் ஆஸ்ரேலியாவுக்கு வந்து அங்கே திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டவர்கள். அவர்களுடைய விசா விண்ணப்பம் 2018 இல் மறுக்கப்பட்டு விட்டது. தற்போது தற்காலிக விசா பெற்றிருக்கும் அவர்களுடைய விசா விண்ணப்ப மேன்முறையீடு ஆஸ்ரேலிய அரசால் கையாளப்படும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *