காற்றை மாசுபடுத்துவதுட்படப் பல தீங்குகளை விளைவிக்கும் நிலக்கரிச் சுரங்கங்களைத் தொடரும் ஆஸ்ரேலியா.

காலநிலை மாற்றங்களை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் மாசுகளைக் காற்றில் கலக்கும் நிலக்கரிப் பாவிப்பை நிறுத்துவது அவசியமென்கிறார்கள் விஞ்ஞானிகள். உலகின் பல சுபீட்சமான நாடுகள் தமது நிலக்கரிச் சுரங்கங்களை மூடும் திட்டத்திலிருக்க ஆஸ்ரேலியாவோ தமது நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து மேலும் அதிகமாக நிலக்கரியை எடுக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறது.

உலகின் 89 % நிலக்கரி இருப்புக்கள் ஆஸ்ரேலியாவில் இருக்கின்றன. அவையை மட்டுமன்றிப் மொத்தமாகவே நிலக்கரிப் பாவிப்பை நிறுத்தவேண்டும் என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றிய அறிக்கை உலக நாட்டுத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டிருந்தது. அப்படிச் செய்தாலும் கூடக் காலநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்தப் போதுமானதல்ல என்றே அவ்வறிக்கை எச்சரித்திருந்தது.

உலகின் வளர்ந்துவரும் நாடுகளின் நிலக்கரித் தேவை அதிகரித்து வருகிறது. அவர்கள் தங்களுக்குத் தேவையான எரிசக்தியைப் பெற்று பொருளாதார வளர்ச்சி பெற ஆஸ்ரேலியாவின் நிலக்கரி அவசியம். அத்துடன் தனது நாட்டுக்கும் நிலக்கரி ஏற்றுமதியால் வரும் இலாமம் அவசியமானது என்று குறிப்பிட்டிருக்கிறார் ஆஸ்ரேலியப் பிரதமர். 

காலநிலை மாற்றத்தைத் தடுக்க உலக நாடுகள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய விடயங்களை விவாதிப்பதற்காக நவம்பரில் உலகின் 196 நாடுகள் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் கூடவிருக்கின்றன. 12 நாட்கள் நடக்கவிருக்கும் அந்த மாநாடு அவ்விடயம் பற்றிய முக்கிய முடிவுகளை எடுப்பதற்காகப் பாரிஸில் 2015 இல் நடந்ததற்குப் பின்னர் நடக்கப்போகும் ஒரு சம்பவமாகும்.

இரும்புத் தாதுவுக்கு அடுத்தபடியாக ஆஸ்ரேலியாவுக்கு மிக அதிக வருமானம் தருவது நிலக்கரி ஏற்றுமதியாகும். எனவே ஆஸ்ரேலியாவின் பொருளாதாரம் அந்த ஏற்றுமதியில் பெருமளவு தங்கியிருப்பதாகக் கூறி ஆஸ்ரேலிய அரசு உலகின் பல வளமான நாடுகள் போல காற்றை மாசுபடுத்தும் நச்சுக்காற்று வெளியிடலை நிறுத்துவதற்கான காலவரையை இதுவரை அறிவிக்கவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *