அமெரிக்க நிதியுதவியால் கொரோனா கிருமிகள் வுஹான் விலங்கியல் பரிசோதனை சாலையில் உருமாற்றப்பட்டனவா?.

ஆழ – அகலத் தோண்டி விசாரிக்கும் பத்திரிகையாளர் அமைப்பான The Intercept வெளியிட்டிருக்கும் விபரங்களின்படி அமெரிக்கா 3.1 டொலர்களைக் கொரோனா வைரஸ் பற்றிய ஆராய்ச்சிகளில் செலவிட்டிருக்கிறது. EcoHealth Alliance என்ற அமெரிக்க ஆராய்ச்சி மையம் அந்த ஆராய்ச்சிகளுக்காக சீனாவின் வுஹான் பரிசோதனைச் சாலைக்கு 599,000 மில்லியன் டொலர்களைக் கொடுத்தது.

மேற்கண்ட விபரங்களை நிரூபிக்கும் அமெரிக்காவின் மக்கள் ஆரோக்கியத் திணைக்களத்தின் 900 பக்கப் பத்திரங்களை The Intercept பத்திரிகையாளர்கள் தமது ஆதாரங்களாக வெளியிட்டிருக்கிறார்கள். 

ஆயிரக்கணக்கான வௌவால்களிடமிருந்து பெறப்பட்ட கொரோனா கிருமிகளையும், அவ்வாராய்ச்சியில் பங்குபற்றும் விஞ்ஞானிகளின் இரத்த மாதிரிகளையும் வுஹான் ஆராய்ச்சி மையத்தில் பாதுகாத்து வந்தார்கள். குறிப்பிட்ட ஆராய்ச்சி மையம் சீனாவின் கிருமிகள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் நிர்வாகத்தினுள் செயற்படுகிறது.

பாதுகாப்பு மட்டத்தில் அதியுயர்ந்த தரமுள்ள வுஹான் பரிசோதனைச் சாலையில் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய மோசமான கிருமிகள் பற்றிய ஆராய்ச்சிகள் நடாத்தப்பட்டு வந்தன. எந்தெந்தக் கிருமிகள் எந்தெந்த விதமான திரிபுகளுக்கு உள்ளாகி மனிதர்களுக்கு ஆபத்தாகலாம் என்றும் ஆராயப்பட்டு வந்தது.

அங்கே தயாரிக்கப்பட்ட கொரோனாக் கிருமிகள் அங்கே ஆராய்ச்சிக்கான எலிகளின் மீது தொற்றவைக்கப்பட்டு ஆராயப்பட்டன. அந்த எலிகள் மனிதர்களின் உறுப்புகளின் பாகங்கள் போல மாற்றியமைக்கப்பட்டிருந்தன. அதன் மூலம் அக்கிருமிகள் மனிதருக்கும் தொற்றுமா, அதன் விளைவுகள் என்பது ஆராயப்பட்டது.

அங்கு நடத்தப்பட்டு வந்த ஆராய்ச்சிகளின் ஆபத்துப் பற்றிக் குறிப்பிடும்போது அமெரிக்காவின் EcoHealth Alliance “அங்கே ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் மிகவும் ஆபத்தான கிருமிகளைக் கையாண்டு வந்தார்கள். அவர்கள் வேலை செய்த சூழலும் மிகவும் ஆபத்தானது. அவர்கள் கிருமிப் பரவலுள்ள வௌவால்களால் கடிக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தன. அப்படியாகக் கடிக்கப்பட்டபோது அவ்விபரங்கள் பதியப்பட்டன. அந்த விபரங்களெவையையும் இதுவரை எவரும் வெளியிடவில்லை.இந்த நிலையில் அந்தப் பரிசோதனைச் சாலையிலிருந்து தவறுதலாக அக்கிருமிகள் வெளியேறவில்லை என்று நிச்சயமாகக் கூறமுடியாது,” என்கிறார் ஆராய்ச்சியாளர் அலீனா சென்.

அப்படியான ஒரு குற்றச்சாட்டையே அமெரிக்கா சமீபத்திலும் வெளியிட்டிருந்தது. 2020 ஆரம்பத்திலேயே அந்தச் சந்தேகம் அமெரிக்காவின் தொற்றுநோய் ஆராய்வுத் திணைக்களத் தலைவர் அந்தோனி பௌச்சியிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் Sars-Cov-2 கிருமியிலிருந்து செயற்கையாக மாற்றப்பட்டதல்ல கொரோனாக் கிருமிகள் என்று மறுத்திருந்தார்.

The Intercept  வெளியிட்டிருக்கும் பத்திரங்கள் ஏற்கனவே கொரோனாக் கிருமிகளுக்கும், வுஹான் பரிசோதனைச் சாலைக்கும் இடையே இருக்கும் தொடர்பு பற்றிய சந்தேகங்களை மீண்டும் கிளப்பியிருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *