வட கொரியாவுக்கு எரிபொருட்களை விற்ற சிங்கப்பூர் வியாபாரியைக் கைது செய்ய உதவுபவர்களுக்கு 5 மில்லியன் சன்மானம்.

ஐ.நா -வின் பொருளாதார, வர்த்தகக் கட்டுப்பாடுகளை மீறி வட கொரியாவுக்கு எரிபொருள் விற்ற சிங்கப்பூர் வியாபாரி ஒருவரைத் தேடுகிறது அமெரிக்கா. குவெக் கீ செங் [Kwek Kee Seng] என்ற பெயருடைய அந்த நபரைக் கைது செய்வதற்கான துப்புக்களைக் கொடுப்பவருக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களைச் சன்மானமாக அமெரிக்க அரசு அறிவித்திருக்கிறது.

Swanseas Port Services shipping company என்ற சிங்கப்பூர் நிறுவனத்துக்குச் சொந்தக்காரர் 62 வயதான குவெக் கீ செங். நிஜத்தில் இல்லாத நிறுவனங்களின் பெயர்களை உபயோகித்துப் பொய்யான பத்திரங்களுடன் கீ செங் வட கொரியாவுக்குப் பல தடவைகள் எரிபொருட்களை ஏற்றுமதி செய்ததாகக் கடந்த ஆண்டிலேயே அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டித் தேடி வருகிறது. அந்த எரிபொருட்கள் வட கொரியாவின் அணு ஆயுதத் தயாரிப்புத் திட்டத்துக்குப் பெரிதும் உதவியாக இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

 கீ செங் ஐக் கைது செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் அவரது இருப்பிடம் தொடர்ந்தும் மர்மமாகவே இருக்கிறது. அவரது இருப்பிடம்  தாய்லாந்து, வட கொரியா, கம்போடியா, கமரூன், தாய்வான், கரீபியத் தீவுகள் என்று வெவ்வேறு துப்புக்கள் கிடைத்திருப்பினும் இதுவரை அமெரிக்காவிடம் அவர் அகப்படவில்லை. 

கீ செங்கின் எரிபொருள் கொண்டுசெல்லும் கப்பல் ஒன்றையும் அமெரிக்கா கைப்பற்றியிருக்கிறது. சுமார் 1.5 மில்லியன் எண்ணெயைக் கடலில் காத்து நின்ற வட கொரியாவின் கொடியுடனான கப்பலொன்றுக்குக் கொண்டுசென்றதாக அமெரிக்க நீதித்துறை குறிப்பிடுகிறது. கீ செங் வியாபாரங்கள் மீதும் அமெரிக்கா சமீபத்தில் பொருளாதார வர்த்தகத் தடையை விதித்திருக்கிறது.  

சமீபத்தில் வட கொரியா தனது பக்கத்து நாடுகளின் பிராந்தியங்களுக்குப் பக்கத்தில் ஏவுகணைகளை வீசி மிரட்டி வருகிறது. அதனால் தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் சில நகரங்களில் மக்களைப் பாதுகாப்பான அறைகளுக்குள் ஒளிந்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அத்துடன் வட கொரியா தான் அணுகுண்டை அவர்கள் மீது செலுத்தத் தயார் என்றும் மிரட்டி வருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *