வட கொரியா ஏவுகணைகளை தென் கொரியாவுக்கருகே சுட்டதால் பிராந்தியத்தில் பதட்டமான நிலைமை.

கொரியா தீபகற்பம் வடக்கு, தெற்கு என்று இரண்டு நாடுகளாகப் பிளவடைந்த 1945 ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக வட கொரியா பறக்கவிட்ட ஏவுகணை தென்கொரியாவின் நீர் எல்லைக்கு அருகே வீழ்ந்தது. 10 ஏவுகணைகளை வட கொரியா செவ்வாயன்று இரவு சுட்டது. அவற்றில் ஒன்று தென்கொரியாவின் Sokcho நகரருகே 60 கி.மீ தூரத்தில் விழுந்தது. அதனால் அருகிலிருந்த தீவொன்றின் மக்கள் பாதுகாப்பு அறைகளுக்குள் ஒளிந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

தெற்கு, வடக்கு கொரிய நாடுகளுக்கிடையே எல்லையாகக் கருதப்படும் Nothern Limit Line அருகே வட கொரியாவின் குறிப்பிட்ட ஏவுகணை விழுந்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்தது. “இதுபோன்ற நடத்தைகளை எங்களால் பொறுக்க முடியாது. எங்கள் தெளிவான பதிலடி அவர்களுக்குக் கொடுக்கப்படும்,” என்றும் தெரிவித்தது. 

கொரியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளை அடுத்திருக்கும் கடற்பகுதியில் அமெரிக்காவுடன் சேர்ந்து ஜப்பான், சீனா, ஆஸ்ரேலியா ஆகிய நாடுகள் இராணுவப் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றை நோக்கி அணு ஆயுதம் பிரயோகிக்கப்படும் என்றும் வட கொரியா எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதையடுத்து விமானம் மூலம் மூன்று ஏவுகணைகள் வட கொரியாவின் எல்லைக்கருகே சுடப்பட்டன.

ஜப்பான், தென்கொரியாவின் தலைவர்கள் தத்தம் பாதுகாப்புப் படையினரின் உயர்மட்டத் தலைவர்களை கூட்டிப் பாதுகாப்பு நிலைமை பற்றிய ஆராய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *