உக்ரேனில் 2,000 க்கும் அதிகமானோர் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

உக்ரேன் மீது ரஷ்யாவின் தாக்குதல் நடந்துகொண்டிருப்பதால் நாடெங்கும் பதட்டநிலை நிலவுகிறது. அதே சமயத்தில் உக்ரேன் அரசு தனது நாட்டுக்குள் இருந்துகொண்டு ரஷ்யாவுக்கு உளவு பார்த்தல், போருக்கான வெவ்வேறு உதவிகள் செய்தல் போன்ற தேசத் துரோகங்களைச் செய்தவர்கள் என்று சுமார் 2,000 பேருக்கும் அதிகமானோரை இதுவரை நீதிக்கு முன்னால் நிறுத்தியிருக்கிறது. 

தேசத்துரோகத்துக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர்களில் முக்கியமான ஒரு நபர் நாட்டின் மிகப்பெரும் பணக்காரரான வியாத்தேஸ்லாவ் போகுஸ்லாயேவ் (Vyacheslav Boguslaev)ஆகும். உலகப் பிரசித்திபெற்ற ஹெலிகொப்டர், விமானங்களின்  இயந்திரத் தயாரிப்பு நிறுவனமான Motor Sich  இன் நிர்வாகத் தலைவர் அவராகும். தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்ய ஹெலிகொப்டர்களுக்கான இயந்திரங்களை அவர் போர் நடக்கும் சமயத்திலும் ரஷ்யாவுக்கு     விற்றுக்கொண்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். 

உக்ரேன் அரசின் உளவுட்துறை போகுஸ்லாயேவின் தொலைத்தொடர்புகளைக் கண்காணித்து உரையாடல்களைப் பதிவுசெய்திருக்கின்றன. தன் மீது சாட்டப்பட்ட குற்றங்களை மறுத்துவரும் போகுஸ்லாயேவ் குறிப்பிட்ட உரையாடல்களும், வியாபாரங்களும் போர் ஆரம்பமாக முன்னர் நடந்தவை என்று வாதாடுகிறார்.

Motor Sich நிறுவனம் நூற்றாண்டுகளுக்கும் அதிகமாக இயங்கி வருகிறது. ஆழமாக ஆராய்ந்து விபரங்களை வெளிப்படுத்தும் உக்ரேனியப் பத்திரிகையாளர்கள் போகுஸ்லாயேவ் ரஷ்யாவின் குடியுரிமையை வைத்திருப்பதாகவும், அவர்களுடன் தொடர்ந்தும் வியாபாரம் செய்து வருவதாகவும் ஏற்கனவே எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். 

சாள்ஸ் ஜெ.போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *