இன்னும் அதிக நிலக்கரியை எரித்துக் காற்றை நச்சாக்கப்போகும் மூன்று தெய்வங்கள்.

நிலக்கரியை எரிப்பதால் சுற்றுப்புற சூழல் தங்கள் நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதுமே பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கிவரும்  மூன்று நாடுகள் அப்பாவிப்பை மேலும் அதிகரிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றன. அதே நாடுகள் தான் உலகில் நிலக்கரியை அதிகம் உபயோகப்படுத்தும் முதல் மூன்று நாடுகள். சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகியவையே அந்த நாடுகள்.

கடந்த வருடம் சீனாவின் ஜனாதிபதி 2060 இல் சீனா காற்றை நச்சுப்படுத்தும் வாயுகளை வெளியிடுவதை முழுவதுமாக நிறுத்தியிருக்குமென்று அறிவித்திருந்தார். இம்மாதம் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களில் அவர் கரியமிலவாயுவைக் குறைக்கும் நடவடிக்கைகளாக எவற்றையும் அறிவிக்கவில்லை, அது வரும் ஐந்தாண்டுகளுக்குள் எவ்வளவு குறைக்கப்படும் என்றும் ஒரு அளவைக் குறிப்பிடவில்லை.

சீனாவின் மின்சாரத் தேவைகளின் அளவு படுவேகமாக வளர்ந்து வருவதால் அதை நேரிடத் தேவையான அளவுக்கு நிலக்கரிப் பாவிப்பே அதிகரிக்கப்படும் என்று தெரியவருகிறது. கடந்த பத்து வருடங்களுக்குள் சீனாவின் மொத்த எரிசக்தித் தேவைக்காகப் பாவிக்கப்படும் விகிதத்தில் நிலக்கரிப் பாவிப்புக் குறைந்திருக்கிறது. ஆனால், சீனாவின் சக்தித் தேவை மொத்தத்தில் அதிகரித்திருப்பதால் நிலக்கரி பாவிக்கும் அளவு அதிகரித்திருப்பதுடன் சீனாவின் நிலக்கரிச் சக்தி மையங்களில் பாதிக்கு அதிகமானவை கடந்த பத்து வருடங்களுக்குள் கட்டப்பட்டவையே. எனவே வரும் சமீபத்தைய வருடங்களில் சீனா தனது நிலக்கரிப் பாவிப்பை அதன் அளவால் குறைக்கப்போவதில்லை. ஆனால், இயற்கை வளங்களால் உருவாக்கப்படும் சக்தியைத் தயாரிக்கும் மையங்கள் வேகமாக அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.  

அமெரிக்காவில் ஜோ பைடனின் அரசு நாட்டில் கரியமிலவாயு வெளியீட்டைக் குறைத்து இயற்கை வளச் சக்திகளின் பாவிப்பை அதிகரிக்கவேண்டுமென்று கூறிவந்தாலும் கூட கடந்த வருடத்தை விட இவ்வருடம் தனது நிலக்கரிச் சக்திப் பாவிப்பை 16 % ஆல் அதிகரிக்கும் என்கிறது. அது 2022 இல் மேலும் 3 % ஆல் அதிகரிக்கும். அதன் பின்னர் அமெரிக்கா படிப்படியாக வேகமாகத் தனது நிலக்கரிப்பாவிப்பைக் குறைக்கும் என்று திட்டமிட்டிருக்கிறது. 

இம்மூன்று நாடுகளில் நிலக்கரிப் பாவிப்பைக் குறைப்பதற்காக, கரியமிலவாயு வெளியீட்டை முற்றாக ஒழிப்பதற்காக எவ்வித தெளிவான திட்டத்தையும் அறிவிக்காத நாடு இந்தியா மட்டுமே. நாட்டின் கரியமிலவாயு வெளியீட்டின் அளவைக் குறைத்து 2030 இல் 2005 இல் வெளியிட்ட அளவுக்குக் குறைப்பதாக மோடி கூறி வருகிறார். 

சீனாவைப் போலவே இந்தியாவிலும் மின்சாரத்துக்கான தேவை படு வேகமாக அதிகரித்து வருகிறது. சனத்தொகை அதிகரிப்போ சீனாவை விட இந்தியாவில் அதிகம். எனவே நீண்ட காலத்துக்கு இதே நிலைமையே இந்தியாவை எதிர் நோக்குகிறது.

இந்தியாவின் மின்சாரத் தயாரிப்புக்கு 70 % எரிக்கப்படுவது நிலக்கரியே. நிலக்கரி எரிப்பு மையங்களில் பாவிக்கப்படும் நிலக்கரியின் அளவு வரும் வருடங்கள் ஒவ்வொன்றுக்கும் 10 % விகிதமாவது அதிகரிக்கவிருக்கிறது. அந்த நிலையே 2027 வரை தொடரும் என்று தெரிகிறது. 

உலகின் மிகப்பெரிய நிலக்கரி நிறுவனமான Coal India 6 பில்லியன் டொலர்களைப் புதிய நிலக்கரிச் சுரங்கங்களையும், பாவிக்கப்படும் சுரங்கங்களைப் பெரிதாக்குவதிலும் முதலீடு செய்யவிருக்கிறது. இந்தியாவின் மின்சாரத் தேவையின் அளவில் ஏற்படும் அதிகரிப்பைச் சுட்டிக்காட்டி அந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி “தற்போதைய நிலைமையில் தாம் தயாரிப்பைக் குறைக்கும் சாத்தியமில்லை,” என்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *