மிக நீண்ட காலமாக ஜப்பானின் பிரதமராக இருந்த ஆபே சுட்டுக் கொல்லப்பட்டார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பானில் தெரிவு செய்யப்பட்ட பிரதமர்களில் வயது குறைந்தவராக [52] இருந்த ஷின்சோ ஆபே முதல் தடவையாக 2006 இல் பதவியேற்றார். அதன் பின்னர் வெவ்வேறு காலகட்டத்தில் பிரதமராகியும், பதவி விலகியும் அரசியலில் ஒரு முக்கிய சக்தியாகத் திகழ்ந்த ஷின்சோ ஆபே தேர்தல் கூட்டமொன்றில் உரை நிகழ்தியபோது துப்பாக்கியால் சுடப்பட்டு, மருத்துவ மனையில் இறந்தார்.
முன்னாள் கடற்படை வீரராக இருந்த ஒருவரே ஆபேயைச் சுட்டதாகப் பொலீசார் தெரிவிக்கிறார்கள். சம்பவம் நடந்த இடத்திலேயே கைது செய்யப்பட்ட கொலையாளியை விசாரித்ததில் தான் ஆபேயின் அரசியலை வெறுத்ததாகவும் அதனாலேயே அக்கொலையைச் செய்ததாகவும் குறிப்பிட்டதாகப் பொலீசார் தெரிவித்தனர்.
அரசியல் கொலைகள் ஜப்பானில் மிக அரிதானவை. ஞாயிறன்று நடக்கவிருக்கும் மேற்சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் கொல்லப்பட்டது ஜப்பானை அதிரவைத்திருக்கிறது. தற்காலப் பிரதமர் பூமியோ கிஷிடா நடந்த கொலையை வன்மையாகக் கண்டித்திருக்கிறார். உலக நாடுகளின் பல தலைவர்களும் தமது கண்டனத்தைத் தெரிவித்ததுடம் அவரது குடும்பத்தினருக்குத் தமது வருத்ததையும் தெரிவித்தனர்.
2021 இன் கடைசிவரை ஆட்சியிலிருக்க வேண்டிய ஷின்சோ ஆபே திடீரென்று ஆகஸ்ட் 2020 இல் தான் பதவி விலகுவதாக அறிவித்தார். 65 வயதாக அச்சமயத்தில் இருந்த அவர் தனது ஆரோக்கியம் காரணமாகப் பதவி விலகியிருந்தார். 2006 – 2007, 2012 – 2020 வரை காலத்தில் பதவியிலிருந்த அவர் ஜப்பான் அரசியலில் ஆபெனொமிக்ஸ் என்றழைக்கப்படும் பொருளாதாரக் கொள்கையையும் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்