யாத்ரீகர்கள் தங்கியிருந்த அமர்நாத் குகைப்பிராந்தியத்தில் வெள்ளத்தால் 13 பேர் மரணம்.
ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 11 வரை நடக்கும் இந்துக்களின் அமர்நாத் யாத்திரிகைத் தலத்தில் வெள்ளத்தாக்குதலால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அமர்நாத் புனித சிலை இருக்கும் குகையை அடுத்திருந்த பகுதியில் கூடாரங்களில் தங்கியிருந்தவர்களைத் திடீரென்று தாக்கிய வெள்ளத்தால் 13 இறப்புகள் ஏற்பட்டன. சுமார் 30 – 35 பேரைக் காணவில்லை. இராணுவத்தின் மீட்புப்படையினர் தேடுதலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
வெள்ளியன்று மாலையில் ஏற்பட்ட மழையின் விளைவாக யாத்திரீகர்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்த 25 கூடாரங்கள் தாக்கப்பட்டன. அச்சமயத்தில் அவர்களுக்கு உணவு பரிமாரப்பட்டுக்கொண்டிருந்தது. அவற்றில் 3 உணவு பரிமாற்றக் கூடாரங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
“ஏற்பட்டிருக்கும் நிலைமையைக் கருத்தில் கொண்டு அமர்நாத் யாத்திரிகை உடனடியாக நிறுத்தப்பட்டிருக்கிறது. மக்களுக்குப் பாதுகாப்பான நிலையை உறுதிசெய்யும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு முடியும்வரை யாத்திரிகை தொடராது,” என்று யாத்திரிகை நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்