தென்னமெரிக்காவின் ஈகுவடோரின் தலைநகரில் உண்டான மண் சரிவில் 24 பேர் சாவு, மேலும் பலரைக் காணவில்லை.

சில தசாப்தங்களில் காணாத அளவு மழையையும் வெள்ளத்தையும் ஒக்டோபர் மாதத்திலிருந்தே சந்தித்து வருகிறது ஈகுவடோர். தலைநகரான குய்ட்டோவில் 24 பேர் மண் சரிவால் உயிரிழந்திருக்கிறார்கள். சில டசின் பேர் காணாமல் போயிருப்பதாகவும், சுமார் 50 பேர் காயப்பட்டிருப்பதாகவும் மீட்புப் பணியினர் தெரிவிக்கின்றனர்.

நகரில் தொடர்ந்து 17 மணிகளாக விடாமல் கொட்டிய மழையினால் மலைப்பகுதியொன்று முழுசாகச் சரிந்து விழுந்திருக்கிறது. நகரின் வட பகுதியிலிருக்கும் தொழிலாளர்கள் குடியிருப்புக்களில் திடீரென்று களிமண்ணும், கற்களும் மழையாகக் கொட்டியிருக்கின்றன. 

அலையாக வந்த சேறும், கற்கும்பங்களும் அப்பகுதியிலிருந்த பாடசாலைகள், மருத்துவசாலை, வீதிகள், பொலீஸ் நிலையம் ஆகியவற்றைத் தாக்கி அப்பகுதியை ஒரு சேற்றிலான குளமாக்கியிருப்பதாகச் செய்தி ஸ்தாபனங்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய படங்கள் சமூக வலைத்தளங்களிலும் காணக்கிடைக்கின்றன. 

திங்களன்று ஏற்பட்ட அந்த மண் சரிவுக்கு முன்னரே 20 க்கும் அதிகமானோர் ஈடுவடோரின் வெவ்வேறு நகரங்களில் மழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். நாட்டின் 24 மாவட்டங்களில் 22 இல் ஒக்டோபர் மாதத்திலிருந்தே மழை பெய்து வருகிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்