இரண்டாவது வாரமாக ஐரோப்பாவை வறுத்தெடுக்கும் வெப்ப அலை ஐக்கிய ராச்சியத்தையும் எட்டியது.
என்றுமில்லாத அளவு அதிக வெப்பநிலை ஐரோப்பிய நாடுகள் பலவற்றையும் ஆக்கிரமித்திருக்கிறது. பிரான்ஸ், கிரவேசியா, இத்தாலி, ஸ்பெய்ன், போர்த்துக்கால், நெதர்லாந்து, ஐக்கிய ராச்சியம் என்று பல நாடுகளிலும் மக்கள் தமது வாழ்நாளின் அதிவெப்பத்தை நேரிட்டிருக்க நாட்டின் அரசுகள் இதொன்றும் ரசிக்கக்கூடிய கோடை வெப்பமல்ல என்று எச்சரித்து, எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றிச் சிந்தித்து வருகின்றன.
40 செல்சியஸ் வெப்பநிலையைத் திங்களன்று அனுபவித்த ஐக்கிய ராச்சியம் உலகின் மிக அதிக வெப்பநிலையை எட்டிய ஒரு நாடாகியது. அதே வெப்பநிலை கிரவேசியா, போர்த்துக்கால் ஆகிய நாடுகளில் சில நாட்களாகவே இருந்து வருகிறது. அங்குள்ள நகரமொன்றில் 47 செல்சியஸ் அளக்கப்பட்டது. ஸ்பெய்னில் சுமார் 11,000 உதைபந்தாட்ட மைதானங்கள் அளவான காடுகள் எரிந்துகொண்டிருக்க, கிரீஸில் தினசரி நூற்றுக்கும் அதிகமான புதிய காட்டுத்தீக்கள் உண்டாகி வருகின்றன.
ஸ்பெய்னிலும், போர்த்துகாலிலும் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோரின் உயிர்களை வெப்ப அலை ஏற்கனவே குடித்திருக்கிறது. பூமியின் காலநிலை மாற்றம் இதுபோன்ற மாற்றங்களைக் கொண்டுவரும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டது உண்மையாகியிருப்பது சுட்டிக் காட்டப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்