சர்வதேச விண்வெளி மையத்தில் உலக நாடுகளுடனான கூட்டுறவை ரஷ்யா 2024 இல் முறித்துக்கொள்ளும்.
விண்வெளியில் பறந்துகொண்டிருக்கு சர்வதேச விண்வெளி மையத்தில் [International Space Station] இத்தனை காலமும் மேற்கு நாடுகளுடன் கூட்டுறவாக ஒத்துழைத்து வந்தது ரஷ்யா. உக்ரேனுடனான போரினால் ஏற்பட்டிருக்கும் மனக்கசப்புகளால் அந்தக் கூட்டுறவை முறித்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறது ரஷ்யா. 2024 முதல் ரஷ்யா தனது சொந்த விண்வெளி மையம் ஒன்றைத் தயாரித்து அதை பூமியைச் சுற்றிவர விண்வெளியில் பறக்கவிடும் என்று அறிவிக்கப்பட்டது.
மேற்கு நாடுகளுடன் விண்வெளி ஆராய்ச்சியில் சேர்ந்து பங்குபற்றிவந்த ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக இருந்துவந்த Dmitry Rogozin சமீபத்தில் புத்தினால் வீட்டுக்கனுப்பப்பட்டார். அவ்விடத்துக்கு யூரி பொரிசோவ் என்பவரைப் புத்தின் நியமித்திருக்கிறார். அவர்களிருவரும் கடந்த நாட்களில் கலந்தாலோசித்த பின்னரே ரஷ்ய அரசின் சார்பாக அவர்களுடைய புதிய விண்வெளி ஆராய்ச்சி மையம் பற்றித் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் நாஸா, ஜப்பானின் JAXA, ஐரோப்பிய ஒன்றியத்தின் ESA மற்றும் கனடாவின் CSA ஆகிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்கள் தொடர்ந்தும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தமது ஆராய்ச்சி, அபிவிருத்திகளைத் தொடரும்.
சாள்ஸ் ஜெ. போமன்