ஜப்பானில் கடும் வெப்பநிலையுள்ள நகரப் பாடசாலைப் பிள்ளைகளுக்குக் குடைகள் கொடுக்கப்படும்
ஜப்பானின் குமகயா நகரத்தில் வெப்பநிலை மக்களுடைய ஆரோக்கியத்துக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் படுவேகமாக அதிகரித்து வருகிறது. அதனால் அங்கே ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு அவ்வெப்பத்திலிருந்து பாதுகாக்க அதற்கென்று தயாரிக்கப்பட்ட குடைகளைக் கொடுக்க நகர நிர்வாகம் தீர்மானித்திருக்கிறது. நகரத்தின் அடையாளச் சின்னத்தைக் கொண்ட குடைகள் சுமார் 9,000 மாணவர்களுக்குக் கொடுக்கப்படும்.
இந்தக் கோடையில் பல தடவை நகரின் வெப்பநிலை 35° செல்சியஸைவிட அதிகமாகியிருக்கிறது. ஜப்பானிய நகர்கள் எல்லாவற்றையும் விட அதிக வெப்பநிலையான 41.5 பாகையை அந்த நகரம் இக்கோடையின் பல நாட்களில் அனுபவித்திருக்கிறது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளில் ஒன்றான இந்த அதீத வெப்ப அலை ஜப்பானின் பல பாகங்களையும் சமீபவருடக் கோடைகளில் தாக்கி வருகிறது. இவ்வருடத்தில் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுச் சுமார் 15,000 பேர் மருத்துவ உதவியை நாடியிருக்கிறார்கள்.
குமகயா நகரம் டோக்கியோவுக்கு வடமேற்கில் சுமார் 60 கி.மீ தூரத்திலிருக்கிறது. டோக்கியோவையும் அதையொட்டிய பாகங்களையும் பாதித்துவரும் Föhnthe hot என்ற வெப்பக்காற்றே அந்த நகரையும் தாக்குகிறது. அத்துடன் குமகயா ஒரு மலையடிவாரத்திலிருக்கிறது. அங்கே வீசும் காற்று மலையிலிருந்து கீழ்நோக்கி [leeward] வருவதால் அது அதிக வெப்பமாக இருக்கிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரத்தியேக உடைகள், வெப்ப காலத்தில் நாய்களுக்கு உதவும் காற்றாடி பொருத்தப்பட்ட உடைகள் ஆகியவற்றைத் தயாரிக்கும் ஸ்வீட் மம்மி என்ற நிறுவனமே குமகயா நகரப் பிள்ளைகளுக்கான் குடைகளைத் தயார் செய்கிறது. குறிப்பிட்ட நிறுவனத்தின் தலைவரான Rei Uzawa என்பவரின் கண்டுபிடிப்புகளே அவை. வெப்பத்திலிருந்து குழந்தைகளைக் காக்கும் அந்தக் குடைகள் கண்ணாடி இழைகளால் [fiberglass] செய்யப்பட்டவை.
சாள்ஸ் ஜெ. போமன்