தனது குழந்தையைக் காப்பாற்ற புலியுடன் மல்லுக்கட்டி வென்ற இந்தியப் பெண்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தாயொருத்தி தனது 15 மாதக் குழந்தையுடன் வீட்டுக்கு வெளியே வந்தபோது ஒரு புலியால் தாக்கப்பட்டாள். 25 வயதான அர்ச்சனா சௌதாரியைப் பலமாகத் தனது கைகளாலும் நகங்களாலும் அப்புலி தாக்கிக் காயப்படுத்தியது. அதையடுத்துக் குழந்தையின் மீது பாய்ந்த புலியை அத்தாய் இரண்டு நிமிடங்களாக வெறும் கையுடன் எதிர்கொண்டு சமாளித்தாள்.
அவர்கள் வாழும் பகுதிக்கு அருகேயிருக்கும் பண்டாவர்க் தேசிய வனத்திலிருந்து அந்தப் புலி வெளியேறியிருப்பதாக அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள். அர்ச்சனாவின் குழந்தையின் தலையையும், கழுத்தையும் அப்புலி கவ்வ முற்படவே அவள் சத்தமிட்டபடி புலியைத் தாக்கியிருக்கிறாள். அவளது சத்தம் கேட்டு அங்கே வந்த ஊரார் அப்புலியை விரட்டவே அது காட்டுக்குள் ஓடி மறைந்துவிட்டது.
புலியின் தாக்குதலால் குழந்தைக்கு அதிக காயங்கள் உண்டாகவில்லை. அர்ச்சனாவின் சுவாசப்பைகளைப் புலியின் தாக்குதல் காயப்படுத்தியதால் அவளது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்