ஐந்தாவது தடவையாக இந்தூர் இந்தியாவின் சுத்தமான நகரமாகத் தெரிந்தெடுக்கப்பட்டது.

“இந்தியாவின் முதலாவது இடத்தைப் பெறுவது இந்தூருக்குப் பழகிப் போய்விட்டது,” என்று மத்தியப் பிரதேச முதலமைச்சர் தனது மாநிலத்தின் பெரிய நகரான இந்தூர் ஐந்தாவது தடவையாக இந்தியாவின் சுத்தமான நகரம் என்ற இடத்தைப் பிடித்ததுக்காக. நகரைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் இந்தூர் கணிசமான வருமானத்தையும் உண்டாக்கிக்கொள்கிறது. 

சுமார் 8,500 சுத்தப்படுத்தும் தொழிலாளிகள் இந்தூரைச் சுத்தமாக வைத்திருப்பதற்காக 22 மணி நேரம் ஊழியத்திலிருக்கிறார்கள். அசுத்தங்களைக் குறைப்பது, மீளப்பயன்படுத்துவது என்பவை இந்தூரின் சுத்தமான நிலைக்கு ஆதாரமாக இருக்கின்றன.

குப்பைகளைப் பிரித்து அவைகளில் ஒரு பகுதியை மீண்டும் பாவிக்கும் பொருட்களாக்குவதன் மூலம் 8 கோடி ரூபாயைச் சம்பாதிக்கிறது இந்தூர். அழுக்கு நீரைச் சுத்தமாக்குவதன் மூலம் அதில் பாதியை மீண்டும் பூங்காக்களுக்கு, தோட்டங்களுக்கு, கட்டட வேலைக்குப் பாவிக்கிறார்கள்.

சகல குப்பைகளையும் ஒன்றாகப் போடும் பெரிய குப்பைக் கொள்கலங்கள் எதுவும் இந்தூரில் கிடையாது. வெவ்வேறு விதமான குப்பைகளைப் போடுவதற்கான 6 கொள்கலங்கள் அங்கே பாவிக்கப்படுகின்றன. அவைகளில் பொதுமக்கள் தமது குப்பைகளைப் பிரித்துப் போடுவதற்கு முடிகிறது.

இவ்வருடத்தில் நீர்ச்சுத்திகரிப்புத் திட்டமும் இந்தியாவிலேயே முதல் முதலாக இந்தூரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நகரிலிருக்கும் சரஸ்வதி ஆறும், மற்றும் சிறு நீர் நிலைகளும் சுத்தப்படுத்தப்பட்டன. நீர் நிலைகளில் அழுக்கு நீரை வழிந்தோடுவதும் தடை செய்யப்பட்டது.

சாள்ஸ் ஜெ. போமன்