பிரேசில் தேர்தலில் தோற்றால் அங்கே ஒரு ஜனவரி 06 ரக வன்முறைகள் எழலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
செப்டெம்பர் 07 திகதி சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடந்த பிரேசில் ஒக்டோபர் 02 ம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்தவிருக்கிறது. பதவியிலிருக்கும் வலதுசாரித் தேசியவாதி பொல்சனாரோவுக்கு எதிராகப் போட்டியிடுபவர் இடதுசாரி வேட்பாளரான லூயிஸ் இக்னாசியோ லூலா டா சில்வா. ஆதரவுக்கணிப்புக்களில் நீண்ட காலமாகவே முன்னணியிலிருக்கும் அவர் லுலா என்று அழைக்கப்படுகிறார்.
சுமார் 44 % ஆதரவைத் தொடர்ந்து பெற்று வரும் லூலா வெற்றிபெற்றுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தனது காய்களை நகர்த்தி வருகிறார் 31 % ஆதரவு பெற்றுவரும் பதவியிலிருக்கும் ஜனாதிபதி பொல்சனாரோ. தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்தே நாட்டின் தேர்தல் முறையையும், உச்சநீதிமன்றத்து நீதிபதிகளையும், தேர்தல் ஆணையத்தையும் தாக்கி விமர்சித்து வருகிறார். தனது 200 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் சமயத்தைத் தனது ஆதரவாளர்களைத் திரட்டிப் பலத்தைக் காட்டும் சந்தர்ப்பமாக மாற்றியிருக்கிறார் பொல்சனாரோ.
தேசிய தினச் செய்தியாகத் தனது ஆதரவாளர்களை ரியோ டி ஜெனீரோ கடற்கரையில் பெரும் திரளாகக் குவியும்படி அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். நாட்டின் இராணுவம் தனது தேசிய தின நிகழ்ச்சியை அங்கே காட்டவிருக்கிறது. பொல்சனாரோவுக்கு ஆதரவான நிறுவனங்கள் நாடு முழுவதிலிருந்தும் ஆதரவாளர்கள் ரியோ டி ஜெனிரோ செல்ல வாகனங்களை ஒழுங்கு செய்திருக்கிறார்கள். இவைகளை ஒன்றிணைத்துத் தேசிய தினக் கொண்டாட்டத்தைத் தனது ஆதரவு தினமாக பொல்சனாரோ மாற்றியிருப்பதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகிறார்கள்.
தேர்தலில் வெற்றிபெறாத பட்சத்தில் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாமல் விமர்சித்துத் தனது ஆதரவாளர்களை பொல்சனாரோ தூண்டிவிடுவார் என்று எதிர்க்கட்சியினர் பயப்பிடுகிறார்கள். அமெரிக்காவில் டிரம்ப் செய்தது போல ஓரிரு வருடங்களாக அதற்காகவே அவர் தேர்தல் அமைப்புகள், நீதிபதிகள் ஆகியோர் மீதான நம்பிக்கையின்மையை மக்களிடையே அவர் தூண்டிவிட்டுக்கொண்டிருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.
நடக்கவிருக்கும் தேர்தலின் முதல் கட்டத்தில் எந்த ஒரு வேட்பாளரும் 50 % விகிதத்துக்கு அதிகமாகப் பெற்று வெற்றிபெறப்போவதில்லை. இரண்டாவது கட்டத் தேர்தலில் போட்டியிடப்போகிறவர்கள் அனேகமாக பொல்சனாரோவும், லூலாவுமாகவே இருக்கும். அச்சமயத்தில் தேர்தல் முடிவுகளில் இரு வேட்பாளர்களுக்குமிடையே மிகக் குறைந்த வித்தியாசமே இருக்க வாய்ப்புள்ளது. அதைத் தனக்குச் சாதகமாகத் திருப்புவதில் பொல்சனாரோ தனது ஆதரவாளர்களை வன்முறைக்குத் தூண்டிவிடலாம் என்ற சஞ்சலம் பிரேசிலில் ஏற்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்