ஜோ பைடனைச் சந்திக்கவிருக்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதி.
அமெரிக்காவில் தனது விஜயத்தை ஆரம்பித்திருக்கிறார் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா. ஜோ பைடனை வெள்ளியன்று சந்திக்கும் அவர் ரஷ்யா – உக்ரேன் போர் விடயத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தும்படி வற்புறுத்துவார் என்று தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கிறது.
வெள்ளையர்களின் ஆட்சியிலிருந்து விடுதலை பெறப் போராடிய தென்னாபிரிக்கர்களுக்கு பல உதவிகளைச் செய்துவந்த சோவியத் யூனியனுக்குப் பின்னர் ரஷ்யாவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட நாடு தென்னாபிரிக்கா. உக்ரேன் ஆக்கிரமிப்பை மேற்கொண்ட ரஷ்யாவின் நடத்தையைத் தென்னாபிரிக்கா பகிரங்கமாகக் கண்டிக்கவில்லை. ஐ.நா-சபையில் அப்போர் பற்றிக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் வாக்களிக்காமல் ஒதுங்கிக்கொண்டது தென்னாபிரிக்கா.
தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் நலேடி பண்டோர் தென்னாபிரிக்காவின் நிலைப்பாடு பற்றிப் பேசியபோது, “இரண்டு தரப்பாருக்கும் இடையே இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுவது அவசியம். ஐ.நா-வின் பொதுச் செயலாளர் அப்பேச்சுவார்த்தைகளைத் தலைமைதாங்கி நடத்தவேண்டும், உக்ரேனின் தானிய ஏற்றுமதியைப் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஆரம்பித்து வைத்தது வரவேற்கத்தக்கது. அதேபோன்றே இதிலும் ஐ.நா-வின் தலையீடு அவசியம்,” என்றார்.
தனது அமெரிக்க விஜயத்துக்குப் பின்னர் ஐக்கிய ராச்சியத்துக்கும் விஜயம் செய்து மகாராணியின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளவிருக்கிறார் ஜனாதிபதி சிரில் ரமபோசா.
சாள்ஸ் ஜெ. போமன்