“போரில் வெல்வதற்குத் தேவையான ஆயுதங்களையெல்லாம் உக்ரேனுக்குக் கிடைக்கச் செய்யவேண்டும்!”
“உக்ரேன் மீது ஆக்கிரமிப்புப் போர் நடத்தும் ரஷ்யாவை எதிர்கொண்டு வெல்வதற்குத் தேவையான ஆயுதங்கள் அனைத்தையும் அவர்களுக்கு வழங்க வேண்டும்,” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டர் லேயன் குறிப்பிட்டிருக்கிறார். உக்ரேன் தலை நகரான கியவுக்கு விஜயம் செய்திருந்த அவர் போரில் வெல்வதற்காக உக்ரேனுக்கு என்னென்ன அவசியமாக இருக்கிறதோ அவ்வுதவிகளையெல்லாம் செய்யவேண்டும் என்றும் கூறினார். அதன் மூலமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசுகள் மீது அவர் அழுத்தம் கொடுத்திருக்கிறார்.
பெப்ரவரிக் கடைசி வாரத்தில் ஆரம்பித்துத் தொடர்ந்தும் நடந்துவரும் போரில் முதல் தடவையாக உக்ரேன் ரஷ்யாவைத் திருப்பித் தாக்கியது. அதன் மூலம் ரஷ்யாவிடம் இழங்க பிராந்தியங்கள் சிலவற்றை உக்ரேனிய இராணுவம் மீண்டும் கைப்பற்றியிருக்கிறது. அவர்களின் அந்த வெற்றியானது இப்போரில் அவர்களின் கை தாழ்ந்து இருந்ததாகச் சந்தேகித்த பலரையும் நிமிர்ந்து பார்க்க வைத்திருக்கிறது. அந்த வெற்றியை அடுத்து சமீப காலத்தில் உக்ரேனுக்கு ஆயுதங்களெதையும் கொடுக்காமலிருந்து வரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மீது அரசியல் அழுத்தம் உண்டாகியிருக்கிறது.
சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் அமெரிக்காவிடமிருந்து உக்ரேனுக்கு மிகப் பெரிய தொகைக்கு ஆயுத உதவி வழங்குவது தீர்மானிக்கப்பட்டது. அதே சமயம் ஐரோப்பிய நாடுகளும் அதேபோன்று ஆயுதங்களை உக்ரேனுக்கு வழங்கவேண்டும் என்ற அறைகூவலும் அமெரிக்காவிலிருந்து விடப்பட்டது.
நீண்ட காலமாகவே ஐரோப்பிய நாடுகள் பலவும் தமது பாதுகாப்புச் செலவுகளைக் குறைத்து வந்திருக்கின்றன. அதனால் அவர்களின் கையிருப்பில் பெருமளவு உபரியான ஆயுதங்கள் இருக்கவில்லை. போரின் ஆரம்பக் கட்டத்தில் உக்ரேனுக்கு ஐரோப்பாவிலிருந்து ஆயுதங்கள் வழங்கப்பட்ட பின்னர் மேலும் ஆயுதங்கள் வாங்குவதற்கான உத்தரவுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவைகள் தயாரிக்கப்பட்டு அந்தந்த நாடுகளின் கையில் கிடைக்க நேரமாகலாம் என்று சில நாடுகள் குறிப்பிட்டு வருகின்றன. ஏற்கனவே உக்ரேனுக்குக் கொடுப்பதாக ஐரோப்பிய நாடுகளால் உறுதியளிக்கப்பட்ட ஆயுதங்களும் முழுவதுமாக உக்ரேனிடம் இதுவரை வந்து சேரவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் உக்ரேனுக்கு பாரமான முக்கிய ஆயுதங்களைக் கொடுப்பதில் தயக்கம் இருந்து வருகிறது. அப்படியான உதவிகள் நடந்துவரும் போரின் உக்கிரத்தை அதிகரிக்கக்கூடும் என்று அவ்வரசுகள் கருதி வருகின்றன. உக்ரேனின் அருகேயிருக்கும் நாடுகள் அப்படியான தயக்கத்தைச் சாடி வருகின்றன. உக்ரேனுக்குத் தேவையான பலமான ஆயுதங்களை ஏற்கனவே கொடுத்திருந்தால் உக்ரேன் ஏற்கனவே போரை வென்றிருக்கும் என்று குறிப்பிடுகிறார் லித்வேனியாவின் வெளிவிவகார அமைச்சர்.
சாள்ஸ் ஜெ. போமன்