குவாந்தனாமோ சிறையில் 17 வருடங்களைக் கழித்த தலிபான் ஒரு அமெரிக்கக் கைதிக்காகப் பரிமாறல்.
அமெரிக்க அரசு தனது குவாந்தனாமோ முகாம் சிறையில் வைத்திருந்த தலிபான் ஒருவனை 17 வருடங்களுக்குப் பின்னர் ஒரு அமெரிக்கருக்காக விடுதலை செய்யப்பட்டிருப்பதாக தலிபான்களின் வெளிவிவகார அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி தெரிவித்தார். விடுதலை செய்யப்பட்ட கைதியான பஷீர் நூர்ஸாய் என்ற தலிபான் அங்கத்தவனும் பக்கத்திலிருக்க அந்த அமைச்சர் செய்தியாளர்களுடன் பேசினார்.
மார்க் பிரேரிச் என்ற அமெரிக்க கடற்படை உத்தியோகத்தர் ஜனவரி 2020 இல் தலிபான்களால் கடத்தப்பட்டிருந்தார். பிரேரிச்சை விடுதலை செய்வதற்காகவே அமெரிக்கர்கள் நூர்ஸாய் என்ற போதை மருந்து வியாபாரியான தலிபான் உறுப்பினரை விடுதலை செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
மேற்கண்ட கைதி பரிமாறல் பற்றி அமெரிக்க அரசிடமிருந்து உத்தியோகபூர்வமான விபரங்களெதுவும் வெளியிடப்படவில்லை. தலிபான்களின் அமைச்சரான முத்தாக்கி, “இது அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே புதிய ஒரு அத்தியாயம் ஆரம்பித்திருப்பதற்கான அறிகுறி,” என்று குறிப்பிட்டார். இந்தக் குறிப்பிட்ட கைதிப் பரிமாறல்களைத் தலிபான்கள் தாம் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்தே கோரி வந்திருந்தார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்