நாட்டின் இராணுவத்தின் ஒரு பகுதியை அணிதிரட்ட புத்தின் உத்தரவிட்டிருக்கிறார்.

செப்டெம்பர் 20 திகதி மாலை ரஷ்யாவின் ஜனாதிபதி புத்தின் தனது குடிமக்களுக்கு உரை நிகழ்த்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு எந்தக் காரணமும் இன்றி நிறுத்தப்பட்டது. அதையடுத்துச் சர்வதேச ரீதியில் புத்தின் உக்ரேன் மீதான போரைத் தீவிரமாக்குவார் என்பதிலிருந்து போரை நிறுத்துவதாக அறிவிப்பார் என்பது வரை கணிப்பிடப்பட்டது. புதனன்று காலையில் தொலைக்காட்சி மூலம் தனது மக்களுக்கு உரையாற்றிய புத்தின், “மேற்குலகம் எங்கள் இறையாண்மையை நசுக்க முயற்சி செய்கிறது,” என்று காரணம் காட்டி நாட்டின் இராணுவத்தினரில் 300,000 பேரைப் போருக்காக அணிதிரட்டும்படி உத்தரவிட்டிருக்கிறார்.

“இன்றே அணிதிரட்டல் ஆரம்பமாகிறது,” என்று புத்தின் அறிவித்தார். களத்துக்கு அனுப்பப்படுவதற்காக அழைக்கப்படுகிறவர்கள் தவிர தாமே விரும்பி வருகிறவர்களும் தேவைப்படுகிறார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கு தெரிவித்தார். களத்துக்கு அனுப்பப்பட முன்னர் போர்வீரர்களுக்கு வேகமாகப் போர்ப்பயிற்சி கொடுக்கப்படும்.

“மேற்கு நாடுகள் அணு ஆயுதத்தைப் பாவிக்கப்போவதாக மிரட்டி வருகின்றன. நாட்டோவின் பிரதிநிதிகள் சிலர் இரசாயணங்களைப் பாவித்துக் கொத்துக்கொத்தாக எங்களை அழிக்கப்போவதாகக் குறிப்பிடுகிறார்கள். நான் அர்த்தமின்றிச் சொல்லவில்லை, எங்கள் நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்காக எந்த விதமான ஆயுதங்களைப் பாவிக்கவும் நான் தயார். டொம்பாஸ் பிராந்தியத்தைப் பாதுகாப்பது எங்கள் அதி முக்கியமான குறியாக இருக்கும். நாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் மக்களிடையே வாக்கெடுப்புக்கள் நடத்தி அவர்கள் எந்த நாட்டுடன் சேர்ந்துகொள்ள விரும்புகிறார்கள் என்று தெரிந்துகொள்வதை எவரும் தடுக்க முடியாது,” என்று புத்தின் மேலும் குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *