இஷ்டமில்லாமல் வரும் நிர்வாணப்படங்களை வடிகட்டும் செயற்பாட்டை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
சமூகவலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பாவனையாளர்களுக்கு நிர்வாணப்படங்கள் உட்பட்ட குப்பைச்செய்திகள் போன்றவற்றைத் திணிப்பவர்களின் தொல்லை மிகப்பெரும் பிரச்சினையாகும். அவற்றைத் தடுக்கும் வடியொன்றை உண்டாக்கிவருவதாக அதன் தாய் நிறுவனமான மேட்டா செய்தி வெளியிட்டிருக்கிறது. குறிப்பிட்ட வடியானது ஒருவர் தனக்கு விருப்பமில்லாத விடயங்கள் தனக்கு எட்டாமலே தவிர்த்து விடலாம். குறிப்பிட்ட சொற்களைப் பாவித்து குறிப்பிட்ட விதமான செய்திகளை வடிகட்டுவதைப் போல இது செயற்படும்.
cyberflash என்று குறிப்பிடப்படும் இந்த வேண்டாத தொல்லைக்கு 2017 இல் 18 – 29 வயதுக்குட்பட்ட ஐம்பது விகிதமான பெண்கள் உட்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. சமீபத்தில் இதுபற்றி நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பீட்டில் உலகிலுள்ள 35 வயதுக்குட்பட்ட பெண்களில் மூன்றிலொரு பங்கினர் இப்படியான இடர்களால் தொல்லைப்படுத்தப்படுகிறார்கள். இந்தத் தொல்லைக்கு எதிரான சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் உலக நாடுகள் பலவும் ஈடுபட்டு வருகின்றன. கலிபோர்னியா மாநிலத்தில் இத்தொல்லைக்கு உட்படுத்துகிறவர்களை நீதிமன்றத்தால் தண்டிக்க முடியும். ஸ்கொட்லாந்தில் இது 2010 லேயே தடை செய்யப்பட்டிருக்கிறது.
செயலிகளை வடிவமைக்கும் ஒருவர் குறிப்பிட்ட வடிகட்டல் முறையைக் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிகிறது. இந்தச் செயல்பாடு இன்ஸ்டாகிராமில் எப்படியாகப் பயன்படுத்தப்படும் என்பது பற்றிய விபரங்கள் மேலும் சில வாரங்களில் வெளியாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்