பேஸ்புக் நிறுவனம் தனக்கான ஏகபோகத்தை உண்டாக்கிச் செயற்படுவதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு.

அமெரிக்காவின் வியாபாரப் போட்டிகளைக் கண்காணிக்கும் அதிகாரமும், 40 மாநிலங்களும் ஒன்றிணைந்து ‘பேஸ்புக் நிறுவனம் தன்னிடமிருக்கும் பலத்தைப் பாவித்து, சட்டங்களுக்கு எதிரான முறையில் தன் போன்ற சிறிய நிறுவனங்களை வளரவிடாமல் முட்டுக்கட்டை போட்டு வருகிறது,’ என்று நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறார்கள். 

வாட்ஸப் (2014 இல் வாங்கப்பட்டது), இன்ஸ்டகிராம் (2012 இல் வாங்கப்பட்டது) ஆகிய உலகில் மிகவும் அதிகமாகப் பாவிக்கப்படும் சமூகவலைத்தளங்களையும் பேஸ்புக் கொள்வனவு செய்ததை முக்கியமாக இக்குற்றச்சாட்டுகள் குறிப்பிடுகின்றன. சமூகவலைத்தளங்களுக்குப் பக்கபலமாக இயங்கும் அந்த இரண்டு நிறுவனங்களையும் தன்னிடம் வைத்திருப்பதன் மூலம் பேஸ்புக் சந்தையில் ஏகபோக அதிகாரத்தை ஸ்தாபித்துக்கொண்டிருக்கிறது என்று அமெரிக்காவின் தேசிய மற்றும் மாநில அரசுகள் கருதுகின்றன.

கடந்த ஓரிரு வருடங்களில் பேஸ்புக் மீது நடவடிக்கை எடுத்து அதன் அளவைச் சிறிதாக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவில் மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளிலும் அதிகரித்திருக்கிறது. குறிப்பிட்ட சமூகவலைத்தளங்கள் அரசியல்வாதிகளை விடவும் அரசியலில் கையோங்கிவிட்டதும், அவைகள் மூலம் பொய்ச் செய்திகள் போன்றவை பரவிவருவதும் கூட இதற்குக் காரணமாகும்.

இதேபோன்ற குற்றச்சாட்டுக்களால் 1998 அமெரிக்க அரசு அன்றைய மைக்ரோஸொப்ட் நிறுவனத்தை நீதிமன்றத்தில் நிறுத்தி அதைச் சிறுபாகங்களாகத் துண்டித்தபின்னர் அமெரிக்காவின் வர்த்தகச் சட்டங்களைக் கண்காணிக்கும் நீதிமன்றத்தில் போடப்பட்டிருக்கும் மிகப்பெரிய வழக்கு இதுவாகும். 

“தனிமனிதர்களும் நிறுவனங்களும் எங்கள் சேவையை வாங்குவதற்குக் காரணம் நாங்கள் அவர்களுக்கு எங்களைப் போன்ற நிறுவனங்களை விடத் தரமான முறையில் சேவைகளை வழங்குகிறோம். எங்கள் மீது அநியாயமாகச் சாட்டப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை எங்கள் முழுப் பலத்துடன் எதிர்கொள்வோம்,” என்று பேஸ்புக் நிறுவனத்தின் வழக்கறிஞர் குறிப்பிட்டிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *