முடக்கப்பட்ட ஆப்கான் அரச நிதிகளை அமெரிக்கா ஆப்கான் பூமியதிர்ச்சி உதவிகளுக்காகத் திறக்கலாம்.

ஆப்கான் அரசுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்குமிடையே கத்தாரில் பேச்சுவார்த்தைகள் நடக்கவிருக்கின்றன. அதன் நோக்கம் அமெரிக்கா முடக்கி வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான் அரசின் கஜானாவிலிருக்கு நிதியில் ஒரு பகுதியைச் சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பூகம்ப அழிவுகளை எதிர்கொள்ளப் பாவிக்கக் கொடுப்பதாகும்.  

தலிபான்களின் வெளிவிவகார அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி இந்தப் பேச்சுவார்த்தைகளுக்காகக் கத்தாருக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தாம் அனுமதிக்கும் தொகை பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிக்குப் போய்ச் சேரும்படியான ஒழுங்குகளைச் செய்வது பற்றித் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருக்கிறது.

ஆப்கான் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் அதிகாரியான டொம் வெஸ்ட் கத்தார் பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்வார். “இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதன் அர்த்தம் நாம் எந்த விதத்திலும் தலிபான்களின் அரசை ஏற்றுக்கொள்வது அல்ல. இதன் நோக்கம் அமெரிக்காவின் எண்ணங்களை முன் நிறுத்திச் செயற்படுதலே,” என்று அமெரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2021 இல் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் ஆட்சிக்குள்ளாகியபோது சர்வதேச உதவிகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானுக்கு நிறுத்தப்பட்டன. அமெரிக்காவால் ஆப்கானிஸ்தான் கஜானாவிலிருந்த 7 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டன. அச்சமயத்தில் ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு உதவிகளினாலேயே செய்ற்பட்டுக்கொண்டிருந்தது.

கத்தாரில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் வேகமாகத் தமக்குத் தேவையான நிதியுதவி கிடைக்கவேண்டும் என்று தலிபான்கள் எதிர்பார்த்தாலும் அதற்குக் காலமெடுக்கும் என்று அமெரிக்க சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *