“அமெரிக்காவின் உறுதிமொழியை நம்பமுடியாது,” என்கிறார்கள் தலிபான்கள்.

புதனன்று அமெரிக்க அரசும், நாட்டோ அமைப்பும் தமது இராணுவத்தினரை ஆப்கானிஸ்தானிலிருந்து முற்றாக வெளியேற்றவிருப்பதாக அறிவித்தன. பாதுகாப்புக் காரணங்களுக்காக இரு பாகத்தினரும் இணைந்தே அதைச் செய்வதாகவும் அதற்கான கடைசித் திகதி இவ்வருடம் செப்டம்பர் 11 ஆகுமென்றும் தெரிவிக்கப்பட்டது.

https://vetrinadai.com/news/afgan-nato-usa/

“அமெரிக்கர்கள் ஏற்கனவே எங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி அவர்கள் மே முதலாம் திகதியே எங்கள் நாட்டை விட்டுப் போகவேண்டும். அதை அவர்கள் இப்போ தங்களிஷ்டப்படி மீறுகிறார்கள். அவர்கள் செப்டம்பரில் அதைச் செய்வதாக இப்போ சொல்வதை நம்பமுடியாது,” என்று கத்தாரில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தலிபான்கள் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்தார்கள்.

கத்தார் பேச்சுவார்த்தைகள் முடிந்தபின் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகள் துருக்கியில் அடுத்த வாரம் ஆரம்பமாக இருந்தன. அந்தப் பேச்சுவார்த்தைகளில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என்கிறார்கள் தலிபான்கள்.

அதே சமயம் தாம் முற்றாகப் பேச்சுவார்த்தைகளைக் கைவிடப்போவதில்லையென்றும் தலிபான்கள் தெரிவிக்கிறார்கள். “எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய இஸ்லாமிய அரசொன்றை எங்கள் நாட்டில் நாம் கட்டியெழுப்பவேண்டும். அதற்குச் சர்வதேசத்தின் உதவிகள் பல வழிகளிலும் எங்களுக்குத் தேவைப்படும். அதற்காக நாம் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், வெளியிலிருந்து வருபவர்கள் நாம் எப்படி நாட்டை ஆளவேண்டுமென்று சொல்வதை நாம் அனுமதிக்க இயலாது,” என்பது தலிபான்களின் வாதம்.

வெளிநாட்டுப் படைகள் தமது நாட்டிலிருந்து வெளியேறுவதைப் பயத்துடனும், திகிலுடனும் கவனித்துக்கொண்டிருப்பவர்கள் பலர். ஆப்கானிஸ்தானின் வெவ்வேறு சிறுபான்மையினர்கள் அவர்களுள் முக்கியமானவர்கள். தலிபான்களினால் திட்டமிடப்பட்டுக் கொடூரமாக நடாத்தப்பட்ட அவர்கள், அமெரிக்க, நாட்டோ இராணுவம் வெளியேறத் திட்டமிட்ட சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னரே விழிப்படைந்து விட்டார்கள். 

https://vetrinadai.com/news/afganistan-hazara-war/

நாட்டின் பெரும்பான்மையான பஷ்டூன் இனத்தவர்களைக் கொண்ட தலிபான் இயக்கத்தினர் இஸ்லாத்தின் சுன்னி மார்க்கத்தினராகும். தம்மினத்தவரைத் தவிர மற்றைய இனத்தவரையும், மார்க்கத்தினரையும் ஒழித்துக்கட்டி ஒரு “சுன்னி இஸ்லாமியக் கோட்பாட்டிலான” ஆட்சியே அவர்களுடைய கனவாகும். அதில் மற்றைய இன, மார்க்கத்தினருக்கு மட்டுமன்றி பெண்களுக்கும் உரிமைகள் மறுக்கப்படும் என்பதே தொடர்ந்தும் அவர்களுடைய கண்ணோட்டமாகும். 

ஆப்கானிஸ்தானின் சிறுபான்மையினரான ஹசார், உஸ்பெஸ்கிஸ், தாஜீக்குகள், துருக்மேனர் ஆகிய சிறுபான்மையினர் தத்தம் பிராந்தியங்களில் தமது இயக்கங்களை ஆரம்பித்து ஆயுதப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள். மீண்டும் தலிபான்கள் தமது கொடுங்கோலாட்சியைக் கையிலெடுக்கும்போது தாம் இனிமேலும் கைகட்டிக்கொண்டிருக்கப்போவதில்லை என்று அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் எவ்வித பிரச்சினைகளையும் தீர்க்காமல் வெளிநாட்டுப் படைகள் வெளியேறும்போது நாடெங்கும் உள்நாட்டுப் போர்கள் ஆரம்பிக்கும் என்ற திகிலே பரவியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *