அமெரிக்காவின் அதிபணக்காரர்கள் தங்கள் வருமானவரிகளைச் சட்டபூர்வமாகவே ஒன்றுமில்லாமல் செய்துவிடுகிறார்கள்.

அமெரிக்க வருமான வரித் திணைக்களத்தின் விபரங்களிலிருந்து கசிந்திருக்கும் விபரங்களின்படி அமெரிக்க பில்லியனர்கள் பலர் சட்டபூர்வமாகவே வருமான வரியேதும் கட்டாமல் வருடக்கணக்காகத் தப்பி வருகிறார்கள். Forbes சஞ்சிகையின்படி அவர்களுடைய சொத்து விபரங்களை அமெரிக்க தேசிய வரித் திணைக்களத்தின் விபரங்களுடன் ஒப்பிட்டு வெளியாகியிருக்கும் அறிக்கையொன்று அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Pro Publica என்ற ஆராய்வு ஊடகமொன்றே இந்த விபரங்களை வெளியிட்டிருக்கிறது. அவ்விபரங்களின்படி 2014 – 2018 வருடங்களில் அமெரிக்காவின் முதல் 25 பணக்காரர்கள் சராசரியாகக் கட்டிய வருமான வரி வெறும் 3.4 % தான். 

அமெரிக்காவின் வருமானவரிச் சட்டங்களின்படி குறிப்பிட்ட ஒரு அளவு சொத்துச் சேர்த்தபின் அப்பணத்தை வெவ்வேறு வர்த்தகத் துறைகளில் செலவழிப்பதாகக் காட்டி அதன் மூலம் வருமான வரியைக் கணிசமாகக் குறைக்கலாம் அல்லது இல்லாமலே செய்யலாம். வழக்கமாக அப்பணக்காரர்கள் தமது சொத்தைப் பணயமாகக் காட்டிப் பெருமளவில் கடன் வாங்கி அப்பணத்திலிருந்து வரும் வருமானத்தில் வாழ்வதாகக் காட்டுகிறார்கள். அதற்கான வட்டியோ குறைவு. கடன்வாங்கியிருக்கும் பணத்துக்கு வரி கட்டவேண்டியதில்லை.

வெளியாகியிருக்கும் விபரங்கள் பலரைக் கோபப்படுத்தியிருக்கின்றன. அமெரிக்காவில் ஒரு தனிப்பட்ட நபரின் வருமானவரி விபரங்கள் இரகசியமாகப் பாதுகாக்கப்படவேண்டியவை. வெளியாகியிருக்கும் விபரங்கள் எங்கிருந்து கசிந்தன என்று கண்டுபிடிக்க அமெரிக்க அரசு பல வழிகளிலும் தனது விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறது.

“அனுமதியின்றிக் கசிந்திருக்கும் இவ்விபரங்கள் சட்டத்துக்கு முரணாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அமெரிக்க அரசின் அனுமதியின்றி வருமான வரி விபரங்களை வெளியிடுவது தண்டனைக்குரியது,” என்று வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஜென் பஸ்கி கொதித்துப்போய்க் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீப காலத்தில் அமெரிக்காவின் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பற்றி டெமொகிரடிக் கட்சியினர் தேர்தல் சமயத்தில் பெரிதும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.மிகப் பெரும் பணக்காரர்களின் சொத்துகளுக்கு மீது வரிவிதிப்பது பற்றி அமெரிக்க அரசியலில் சமீபகாலத்தில் விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால், தாம் உழைத்த பணத்தை அரசுக்குக் கொடுக்க விரும்பும் மனப்பான்மை அமெரிக்காவில் பெரிதும் கிடையாது.

டெமொகிரடிக் கட்சியின் முக்கிய புள்ளிகளான பெர்னி சாண்டர்ஸ், எலிசபெத் வாரன் ஆகியோர் நாட்டின் அதிபெரும் பணக்காரர்களின் சொத்துக்களுக்கு 2-3 விகித சொத்துவரி விதிக்கவேண்டுமென்று கோரி வருகிறார்கள். ஆனால் அதற்கான அரசியல் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை. வெளியாகியிருக்கும் வருமான வரி விபரங்களை டுவீட்டிய எலிசபெத் வாரன் போன்றவர்கள் மீண்டும் தங்கள் கோரிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *