ரஷ்யா மீதான முடக்கங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா என்று வாக்கெடுக்க விரும்புகிறது ஹங்கேரியின் ஆளும் கட்சி.

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பைத் தண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் மீது போட்டிருக்கும் பல விதமான முடக்கங்கள் ஐரோப்பியர்களின் பொருளாதாரத்தையும் கணிசமானப் பாதித்து வருகிறது. ரஷ்யாவுடன் நீண்ட காலமாக நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்த நாடுகள் சிலவற்றில் ரஷ்யா மீது அனுதாபமும் இருக்கிறது. அப்படியான நாடுகளில் முக்கியமானது ஹங்கேரி. ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் எரிவாயு வாங்குவதை நிறுத்திவரும் சமயத்தில் மேலதிகமாக அதைக் கொள்வனவு செய்வதற்காக உடன்படிக்கை செய்திருக்கிறது. புதிய நடவடிக்கையாக தனது நாட்டு மக்களிடையே ரஷ்யா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் முடக்கங்களுக்கு ஆதரவுள்ளதா என்று வாக்கெடுப்பு மூலம் அறிந்துகொள்ள வேண்டும் என்கிறது ஆளும் கட்சியான Fidesz. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டம் எடுக்கும் முடிவுகள் ஹங்கேரியின் சுய நிர்ணய உரிமைகளுக்கு எதிர்ப்பானதாக இருக்கிறதென்று பல வழிகளிலும் குற்றஞ்சாட்டி வருகிறது ஹங்கேரியின் ஆளும் கட்சி. ஹங்கேரிய ஆளும் கட்சியின் வலதுசாரித் தேசியவாத நடவடிக்கைகள் மக்களின் தனிமனித உரிமைகளைப் பறிப்பதாக நாட்டின் எதிர்க்கட்சிகளும், ஐரோப்பிய ஒன்றியமும் குற்றஞ்சாட்டி வருகின்றன. அதைத் தண்டிப்பதற்காக ஹங்கேரிக்கு ஐரோப்பிய ஒன்றியம் கொடுப்பதாகத் திட்டமிட்டிருந்த பெரிய நிதியுதவியொன்றையும் முடக்கப்போவதாக ஐ.ஒன்றியம் குறிப்பிட்டிருக்கிறது.

ஹங்கேரிய ஆளும் கட்சியினரின் இரகசியக் கூட்டம்  ஒன்றின் பின்னர் கட்சியின் உயர்மட்டத் தலைவரான மேட் கோசிஸ் பத்திரிகையாளர்களுடன் பேசியபோது, “எரிபொருட்களின் விலையேற்றம் மற்ற விலைகளையும் உயர்த்திச் சாதாரண மக்களைப் பாதித்து வருகிறது. அதுபற்றிய மக்களின் கருத்துக்களை நாம் அறிந்துகொள்வதன் மூலம், ஒன்றியத்தில் தமது எண்ணப்படி முடிவுகளை எடுக்கும் ஆட்சியாளர்களுடன் நாம் வாதித்து எங்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு உதவும் நடவடிக்கைகளை எடுக்க முடியும்,” என்று குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *