“சீனாவிலிருந்து வருகிறவர்களைக் கொவிட் பரிசீலனைக்கு உள்ளாக்குங்கள்,” என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

கொவிட் 19 ஆரம்பித்ததையடுத்து மக்களின் நகர்வுகளுக்கு நாட்டில் கடுமையான கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியிருந்தது சீனா. அதைத் திடீரென்று கைவிட்டதும் நாடெங்கும் படுவேகமாகப் பரவிவருகிறது கொரோனாத்தொற்றுக்கள். அதை எதிர்கொள்ள சீனா அத்தொற்றின் ஆரம்பகாலத்தில் செய்ததைப் போன்று மருத்துவமனைகள், ஆரோக்கிய சேவைகளை அதிகரித்திருக்கிறது. ஆனால் மக்கள் நகர்வுகளை முடக்கும் நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தவில்லை. அதன் விளைவாகச் சீனர்கள் தமது நாடுகளுக்கு வருவதுபற்றி உலகளவில் பதட்டம் ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் தமது நாடுகளில் அப்பெருந்தொற்றால் மோசமான ஆரோக்கிய நெருக்கடி ஏற்படலாகாது என்பதால் வெவ்வேறு நாடுகள் தமது நாடுகளுக்கு வரும் சீனர்களை வெவ்வேறு விதமாக எதிர்கொள்கிறார்கள்.

கொவிட் 19 ஆல் மில்லியன் கணக்கானோரை மரணத்திடம் பலிகொடுத்த ஐரோப்பிய நாடுகளில் சிலவும் சீனர்களுக்கான பயணக்கட்டுப்பாடுகளைத் தமது நாடுகளின் எல்லைகளில் அறிமுகப்படுத்தியிருக்கின்றன. பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெய்ன் அந்த நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றிய முடிவை எதிர்பார்க்காமலேயே அறிமுகப்படுத்தியிருந்தன. ஆங்காங்கே சில நாடுகள் மட்டும் அப்படியான கொவிட் பரிசோதனை போன்ற கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதில் பயனேதுமில்லை என்பதால் புதன்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் தமது எல்லைகளிலெல்லாம் எந்த நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று கலந்தாலோசித்தனர்.

அதேசமயம் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் மக்கள் ஆரோக்கிய சேவையினர், உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு, ஒன்றியத்தின் மக்கள் ஆரோக்கிய அமைப்பு ஆகியவற்றின் ஆலோசகர்கள் சீனாவிலிருந்து பயணிப்பவர்களின் மீது கட்டுப்பாடுகள் அவசியமில்லை, நிலைமையை விழிப்புணர்வுகள் கவனித்து வந்தால் போதும் என்று குறிப்பிடுகிறார்கள். சீனாவில் தற்போது பரவிவரும் கொவிட் கிருமிகளின் ஆதிக்கம் ஏற்கனவே ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் எதிர்கொள்ளப்பட்டவையே.  இந்தப் பிராந்தியங்களில் பெரும்பாலானோர் தொற்றுமருந்தைப் பெற்றிருப்பதால் சீனாவின் பரவலால் உடனடி ஆபத்து இல்லையென்றே மேற்கண்ட ஆரோக்கிய அமைப்புகளின் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றிய நாட்டின் பிரதிநிதிகள் தமது ஐந்து மணி நேர ஆலோசனைகள், விவாதங்களின் பின்பு சீனாவிலிருந்து வருபவர்கள் மீது சில கட்டுப்பாடுகளை எடுக்கும்படி பரிந்துரை செய்திருக்கிறது. அவற்றைச் சகல நாடுகளும் கைக்கொள்ளும் கட்டாயமில்லை எனினும் அவை நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்றே கணிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து பயணிப்பவர்கள் 48 மணி நேரத்துக்கு முன்னர் தம்மைப் பரிசீலனை செய்து தொற்று இல்லையென்ற சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும். அங்கிருந்து வரும் விமானங்களின் கழிவுநீரை உடனடியாகப் பரிசீலித்து புதிய வகை கொரோனாக்கிருமிகள் இருக்கின்றனவா என்பதை அறிந்துகொள்ளல், வரும் பயணிகளில் சிலருக்குத் தொற்றுப்பரிசீலனை செய்தல் ஆகியவை பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றன. மேற்கண்ட நடவடிக்கைகள் ஜனவரி 08 ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.

தமது நாட்டுப் பயணிகள் மீது பிரத்தியேகமாகக் கொவிட் கட்டுப்பாடுகள் போடுவதைச் சீனா ஆட்சேபித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *